பக்கம் எண் :

சீறாப்புராணம்

1611


இரண்டாம் பாகம்
 

4428. கள்ள றாச்செழுங் கமலமென் கரத்தினிற் சலில

     மள்ளி மேலுறத் தெளித்தருந் தூதுவ ரடங்கா

     வெள்ளி மாமறை மேலவன் விதியினாற் கொறியே

     யுள்ளங் கூர்தர நீயிவ ணெழுந்திடென் றுரைத்தார்.

73

      (இ-ள்) அவ்வாறு குவிக்க, அருமையான றசூலாகிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிஹாமிது அஹ்மது மஹ்மூது முகம்மது முஸ்தபா காத்திமுல் அன்பியா சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் மதுவானது நீங்கப் பெறாத செழிய தாமரை மலரைப் போன்ற மெல்லிய கையினால் நீரை வாரி அவைகளின் மேலே பொருந்தும்படி தெளித்து ஆடே! நீ தோற்றத்தி லமையாத வெள்ளியை யொத்த பெருமை பொருந்திய புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தை யுடைய யாவருக்கும் மேலானவனான அல்லா ஜல்ல ஜலாலகுவத்த ஆலாவின் கற்பனையால் மனமானது மகிழ்ச்சியடையும் வண்ணம் இங்கே எழும்பக் கடவாயென்று கூறினார்கள்.

 

4429. துண்ட மாகிய தொன்றெனப் பொருந்தியூன் றோய்ந்து

     பண்டு போலெழு முயிரும்வந் துடலினிற் பரப்பக்

     கண்டு யாவரு மகிழ்வுறக் காலினை மடக்கிக்

     கொண்டெ ழுந்துமுன் குதித்தது காட்சியின் கொறியே.

74

     (இ-ள்) கண்டங்களாகிய அவை ஒன்றென்று சொல்லும் வண்ணம் ஒன்றோடொன்று சேர்ந்து மாமிசமானது தோயப் பெற்று முன்போல எழா நிற்கும் பிராணனும் வந்து சரீரத்திற் பரவக் காட்சியினாலுண்டான அவ்வாடானது அனைவரும் பார்த்து மகிழ்ச்சி யடையும்படிப் பாதங்களை மடித்துக் கொண்டு எழும்பி முன்னாற் சாடிற்று.

 

4430. திருகி நீண்டற வளைந்தெழு மருப்பின்மெய் செறிந்து

     பெருகு கின்றசெம் மயிருறுப் பினிலெழில் பிறங்குங்

     கருநி றக்கவைக் குளம்பினீண் டெழுதுளைக் காதி

     னுருவின் மிக்கதென் றுணரநின் றதுகொறி யுழையின்.

75

      (இ-ள்) அவ்வாறு சாடிய அவ்வாடானது முறுகி நீட்சியுற்று ஒடியும்வண்ணம் எழா நிற்குங் கொம்புகளினாலும், உடலினிடத்து நெருங்கப் பெற்று அதிகரித்த செந்நிறத்தைக் கொண்ட உரோமங்களையுடைய உறுப்புக்களாலும், அழகானது பிரகாசியா நிற்குங் கருநிறத்தையுடைய பிளப்பைப் பொருந்திய குளம்புகளினாலும் நீண்டு ஓங்கிய துவாரங்களையுடைய செவிகளினாலும், வடிவத்தினாலும் மேலானதென்று அறியும்படிப் பக்கத்தில் நின்றது.