பக்கம் எண் :

சீறாப்புராணம்

1616


இரண்டாம் பாகம்
 

4441. இருகடை வளைப்ப வுடல்குழைந் திருந்த

         விருஞ்சிலை நாணுதைத் தெறியும்

     பொருசரத் தூணி முதுகினிற் றாங்கிப்

         பொங்கிய சினத்தொடு மாலிக்

     கருளவு பென்னு மெறுழ்வலி யரச

         னசத்தெனுங் குலத்தவர் சூழ

     வருவிசைப் புரவி யாயிரஞ் சூழ

         வேகினன் மலர்க்குடை கவிப்ப.

3

     (இ-ள்) அன்றியும், மாலிக்கென்பவன் இவ்வுலகத்தில் கண் தந்த அவுபென்று சொல்லும் மிகுத்த வலிமையையுடைய மன்னவன் இரு பக்கத்தினது நுனியையும் வளைக்க, அதனால் தனது உடலானது குழையப் பெற்றிருந்த பெரிய கோதண்டத்தின் நாணிற் பொருத்தியுதைத்து வீசா நிற்கும் பொருதுகின்ற அம்பறாத் தூணியையும் முதுகினிடத்துப் பொறுத்து, அசதென்று சொல்லுங் கூட்டத்தார்கள் சூழ்ந்து வரவும், அங்கு வந்த வேகத்தைக் கொண்ட குதிரைகள் ஆயிரஞ் சூழ்ந்து வரவும், புஷ்பங்களினால் அலங்கரிக்கப்பட்ட குடையைக் கவிக்கவும், அதிகரித்த கோபத்தோடும் சென்றான்.

 

4442. கனன்முகந் தெரியுங் கவட்டிலைச் சூலங்

         கைவிசைத் தெறிகதிர் வேலுங்

     குனிதரு வாளு மருங்கினில் விசித்து

         கத்துபான் குழுவினர் சூழப்

     புனைமயிர்ப் புரவி யாயிர நடப்ப

         அசன்பெறும் புதல்வன்கோ ளரியின்

     சினமுறு மனத்த னுயையினா வென்னுஞ்

         செம்மலு மேகினன் சிறப்ப.

4

      (இ-ள்) அன்றியும், ஹசனென்பவன் பெற்ற புத்திரனும் கொலைத் தொழிலைச் செய்கின்ற சிங்கத்தைப் பார்க்கினு மதிகக் கோபத்தைப் பொருந்திய மனத்தையுடையவனுமான உயையினாவென்று சொல்லும் அரசனும், அக்கினியினது முகத்தைப் போன்று தோன்றா நிற்குங் கவரைக் கொண்ட இலைகளையுடைய சூலத்தையும், கையினால் வேகமாய் வீசப்படுகின்ற பிரகாசத்தையுடைய வேலையும், வளைந்த வாளையும் இடையில் வைத்துக் கட்டிக் கத்துபானென்று சொல்லுங் கூட்டத்தார்கள் சூழ்ந்து வரவும், அலங்கரிக்கப்பட்ட மயிர்களையுடைய குதிரைகள் ஆயிரம் நடந்து வரவும், சிறப்பாகச் சென்றான்.