பக்கம் எண் :

சீறாப்புராணம்

162


முதற்பாகம்
 

      (இ-ள்) அன்றியும், ஹலிமா அவர்கள் தங்களது மக்களும் தாங்களும் பகைவர் மேற் கோபிக்கா நின்ற வேற்படை தாங்கிய கையினையுடைய ஹாரிதவர்களும் குனையின் நகரத்திலுள்ள குடிகளுக்கெல்லாம் மேலான குடியென்று சொல்லும்படி வாழா நிற்கும் அவ்வீட்டின்கண் நபி முகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களின் பெரிய பிரகாசமே யல்லாமல் ஒரு தினமேனும் விளக்கேற்றி வைத்ததுமில்லை ஒப்பற்ற ஹக்கு சுபுகானகுவத்த ஆலாவின் கிருபையினால் துன்பத்தைத் தராநின்ற பிணிகளும் தாரித்திரியமும் தங்களுக்கன்றித் தங்களை நெருங்கியவர்களுக்கும் இல்லாமல் மகிழ்ச்சி யடைந்து செல்வமும் பெருமையும் பெற்று இருந்தார்கள்.

 

     376. எந்நில மனைத்துந் தீனெறி நடப்ப

             வியல்பெறு மனுமுறை நடப்பத்

        துன்னிய வறத்தின் றுறைவழி நடப்பத்

             துன்பமற் றின்பமே நடப்பப்

        பன்னருஞ் செங்கோ லுலகெலா நடப்பப்

             பாரினிற் குலமுறை நடப்ப

        மன்னிய ரெவருஞ் சொற்படி நடப்ப

             முஹம்மது நபிநடந் தனரே.

86

     (இ-ள்) எல்லாவுலகங்கள் முழுவதிலும் தீனுல் இஸ்லாமென்னு மார்க்கமானது நடக்கவும், ஒழுங்கு பெறும் மானுஷகரின் சன்மார்க்க மானது நடக்கவும், நெருங்கிய தருமத்தினது துறைநெறி நடக்கவும், துன்பமானது நீங்கி இன்பமே நடக்கவும், சொல்லுதற்கரிய செவ்விய இராஜகோன்மை உலகமெல்லாம் நடக்கவும், பூமியின்கண் குலஆசாரமுறைமை மாறாமல் நடக்கவும், பொருந்திய யாவர்களும் ஒருவர் சொல்லை யொருவர் தட்டாமல் நடக்கவும் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் நடந்தார்கள்.

 

     377. நிலமிசை யாசீங் குலம்பெயர் விளங்க

             நிகரிலா நேர்வழி விளங்கக்

        குலவிய நிறையும் பொறுமையும் விளங்கக்

             கோதிலாப் பெரும்புகழ் விளங்க

        வுலகுயர் புதுமைக் காரணம் விளங்க

             வுயர்தரு வேதமும் விளங்க

        மலர்தரு சோதி முகமதி விளங்க

             முகம்மது சொல்விளங் கினவே.

87

     (இ-ள்) பூமியின் மீது ஹாஷிமென்று சொல்லுங் குலமும் பெயரும் விளங்கவும், ஒப்பற்ற நேர்மையான பாதை விளங்கவும்,