பக்கம் எண் :

சீறாப்புராணம்

1621


இரண்டாம் பாகம்
 

4452. அரும்புவா யொழுகும் பசுநறுந் தேற

         லகன்பணை மருதமு நீந்நி

     யிரும்பெனச் செறிந்த மோட்டுடற் களிறு

         முழங்கிய விருவரை கடந்து

     கரும்புவி போலக் கதிர்சுடக் காய்ந்த

         கடும்பரற் பாலையு முல்லைக்

     குரம்பையுங் குடில்சூழ் முல்லையு நீந்திக்

         கொடிநகர் மதீனநா டடைந்தார்.

14

     (இ-ள்) அவ்வாறு நீள, அவர்கள் பூக்களினிடத்திருந்து சிந்திய பசுமையைக் கொண்ட நறிய மதுவைப் பொருந்திய விசாலமாகிய விளைநிலங்களையுடைய மருத நிலங்களையுங் கடந்து இரும்பைப் போலுஞ் செறிதலுற்ற பெரிய சரீரத்தையுடைய யானைகள் முழங்குகின்ற பெரிய மலைகளைத் தாண்டிச் சூரியனானவன் வெப்பத்தைச் செய்ய, அதனாற் கரிய பூமியைப் போல உலர்ந்த கொடிய பரற்கற்களையுடைய பாலைநிலங்களையும், முல்லை நிலத்தினது சிறு குடில்களையும், சிறு குடில்கள் வளைந்த முல்லை நிலங்களையுந் தொலைத்துக் கொடிகளையுடைய நகரமாகிய திரு மதீனமா நாட்டைச் சேர்ந்தார்கள்.

 

4453. ஒலித்திரங் கருவி வீழொலி மறாத

        வுகுதெனும் பெருவரைப் புறத்திற்

     கலித்தெழு சேனை யசத்தொடு கத்பான்

         குழுவினர் செறிதர அவுபுஞ்

     சலித்திளை யாத வீரமுந் துணிவுந்

         தாங்கிய உயையினா வேந்தும்

     பலித்திட விசய மெனவவ ணிறங்கிப்

         பாளையம் வகுத்தன ரன்றே.

15

      (இ-ள்) அவ்வாறு சேர்ந்து அதிகரித் தோங்கா நிற்குஞ் சைனியங்களாகிய அசதுக் கூட்டத்தார்களுடன் கத்துபான் கூட்டத்தார்கள் நெருங்கும் வண்ணம் அவுபென்பவனும், வருந்தி மெலியாத வீரத்தையுந் துணிவையும் பொறுத்த உயையினாவென்று சொல்லு மரசனும், சத்தித்து முழங்கா நிற்கும் அருவிகள் தாே்ழ விழுகின்ற ஓசையானது நீங்காத உகுதென்று கூறும் பெரிய மலையினது பக்கத்தில் வெற்றியானது செழித்து வளரவென்று சொல்லி யிறங்கி அங்கே தங்களது கூடாரங்களை வகையாக அடித்தார்கள்.