பக்கம் எண் :

சீறாப்புராணம்

1630


இரண்டாம் பாகம்
 

ஹாமிது அஹ்மது மஹ்மூது முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைப் பார்த்து வந்த இக்காரியமானது தருமநெறியில் தங்கிய யாவருக்கும் பெரியவனான அல்லா ஜல்லஜலாலகு வத்த ஆலாவின் செய்கையா? அல்லது நீங்கள் உங்கள் மனதிற் கருதிச் சொல்லிய சமாச்சாரமா? இவற்றில் யாது? என்று கேட்டார்கள். அதற்கு நாயகம் நபிகட் பெருமானார் நபிசல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும் யான்றான் சொன்னேனென்று சொன்னார்கள்.

 

4471. கருத்தினுட் டெளிந்து நினைத்தவிச் சூழ்ச்சி

         காட்சியீர் நும்பொருட் டோதீ

     னருத்திய வெளியேம் பண்புறும் பொருட்டோ

         வென்றலு மழகுற வுமக்கோர்

     வருத்தமில் வேண்டி யீண்டுவந் தடைந்த

         காபிர்க ளியாவரு மறுகிச்

     செருத்தொழில் வீய நினைத்ததென் றுரைத்தார்

         தீனர்க ணாவணை யிருப்பார்.

33

     (இ-ள்) அவ்வாறு சொல்ல, அவர்களிருவரும் அற்புதத்தையுடைய நபிகட்பெருமானே! உங்கள் மனத்தின்கண் கருதித் தேறிய இந்த ஆலோசனையானது உங்கள் நிமித்தமாகவா? அல்லது தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம்மார்க்கத்தை யருத்திய எளியேங்களாகிய யாங்கள் குணத்தைப் பொருந்தும் நிமித்தமாகவா? இவற்றில் எந்த நிமித்தத்திற்காக வென்று கேட்ட மாத்திரத்தில், தீனவர்களான முஸ்லிம்களது நாவாகிய அணையின்மீது இருக்கின்ற நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிசெய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபுறப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அழகானது பொருந்தும் வண்ணம் உங்களுக்கு ஒரு துன்பமுமில்லாதிருக்க வேண்டி இங்கு வந்து சேர்ந்த காபிர்களனைவரும் மனங்குழம்பி அவர்கள் பூண்ட யுத்தத் தொழிலானது கெடும்படி கருதியதென்று சொன்னார்கள்.

 

4472. குறித்திவை யுரைத்த வாசகந் தாங்கிக்

         குழைந்துநன் மனத்தொடு மதியு

     மறுத்தெதி ருரைப்ப தென்னென மறுகி

         மஆதருள் சகுதொடு சகுது

     மறத்துறை விளைந்த பேரொளி மணியே

         யாதித னருளினிற் றிரண்ட

     திறத்தனிப் பயனே யெங்கள்கண் ணகலாச்

         செல்வமே யென்றுரை தெரிப்பார்.

34