பக்கம் எண் :

சீறாப்புராணம்

1634


இரண்டாம் பாகம்
 

மெய்ம்மார்க்கத்தினது அசறுத் தொழுகை சமீபித்த நேரமும் வந்து நெருங்கிற்று.

 

4479. வணங்கு முன்ன ரெழத்திரள் வாசியு

     முணங்கு பல்கொடி யாட வுருமென

     விணங்கு பல்லிய மார்ப்ப விகலுறக்

     கணங்கொள் சேனையி னீண்டினர் காபிரால்.

41

     (இ-ள்) அவ்வாறு நெருங்க, முஸ்லிம்கள் யாவரும் அத்தொழுகையைத் தொழுவதற்கு முன்னர்க் காபிர்கள் குதிரைக் கூட்டங்களெழவும், ஓசியா நிற்கும் பல கொடிகளாடவும், இடியைப் போலும் பொருந்திய பலவாச்சியங்க ளொலிக்கவும், வலிமையும் ஊக்கமு முடைய கூட்டத்தைக் கொண்ட சைனியங்களோடும் வந்து கூடினார்கள்.

 

4480. சிலைவ ளைத்தெழி நாணினைச் சேர்த்தியூன்

     மலிவண் டேந்திமின் வாழ்தரு வாளுரீஇத்

     தொலைவி லாச்சினந் துன்னவந் தார்த்தன

     ரலையை யொத்தெதிர்த் தார்அசு காபிகள்.

42

      (இ-ள்) அவ்வாறு கூடிய அவர்கள் கோதண்டத்தை வளைத்துப் பிரகாசத்தையுடைய நாணைப் பொருத்தித் தசையானது அதிகரிக்கப் பெற்ற அம்பைத் தாங்கி ஒளிவானது வாசஞ் செய்கின்ற வாளாயுதங்களை யுறையை விட்டு முருவி மாறாத கோபமானது செறியும்படி வந்து ஆர்த்தார்கள். உடனே அசுஹாபிமார்களும் சமுத்திரத்தைப் போன்று அவர்களை எதிர்த்தார்கள்.

 

4481. திருந பிக்குயி ரென்னுந் திறத்தினோர்

     கரிய வன்குபிர் மள்ளருங் காதியே

     பொருது கின்றன ரன்றிப் புலாலுணீர்

     தரவோர் காய மடுத்தில சற்றுமே.

43

     (இ-ள்) தெய்வீகந் தங்கிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிது ஹாமிது அஹ்மது மஹ்மூது முகம்மது முஸ்தபா காத்திமுல் அன்பியா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களுக்குப் பிராணனென்று சொல்லுந் தன்மையையுடையவர்களான அசுஹாபிமார்களும், கருநிறத்தைக் கொண்ட வன்மையையுடைய காபிர்களாகிய வீரர்களும், அவ்வாறு ஒருவரோடொருவர் காதிப் பொருதுகின்றார்களேயல்லாமல் ஊனினிடத்துள்ள இரத்தமானது சிந்தும் வண்ணங் கொஞ்சமேனும் ஒரு காயமுமடுத்திலது.