முதற்பாகம்
382. ஆரிது மதனைக் கேட்டுறத் தெளிந்தங்
கழகுறுங் கருமமீ தென்னச்
சீர்பெறு மனையா டன்னையும் பயந்த
செல்வரி லொருசிறு வனையும்
பாரினில் விளங்கு முகம்மது தனையும்
பண்புடன் வாகனத் தேற்றி
யேர்பெறும் வரிசை மக்கமா நகருக்
கெழுந்தனன் செழும்புய மிலங்க.
92
(இ-ள்)
ஆரிதவர்களும் அச்சமாச்சாரத்தை அங்கு கேள்வியுற்றுப்
பொருந்தும்படி யுணர்ந்து இதுவே அழகான கருமமென்று
சொல்லிச் சிறப்புத் தங்கிய தங்களது மனைவியான ஹலிமா
அவர்களையும் தாங்கள் பெற்ற செல்வத்தையுடைய
பிள்ளைகளில் ஒரு பிள்ளையையும் இவ்வுலகின்கண் விளங்கா
நிற்கும் நபிமுஹம்மது சல்லல்லாகு
அலைகிவசல்லமவர்களையும் தகுதியாக ஒரு வாகனத்தின்
மீதேற்றித் தாங்களும் தங்களது செழிய புஜங்களிரண்டும்
பிரகாசிக்கும்படி அழகு பொருந்திய சங்கையை யுடைய
மக்கமா நகரத்திற்குப் பிரயாணமானார்கள்.
383. வானவர் சுவனப் பதிநிக
ரனைய
மக்கமா நகரினிற் புகுந்து
கானமர் குழலா ராமினா வென்னுங்
கனிமொழி பொற்றொடிக் கரத்தி
னானமுங் கவினும் வளர்ந்துமே னிவந்த
நபிமுகம் மதுநயி னாரைத்
தேனவிழ் பதும மென்மலர்ச் செழுந்தாட்
டிருந்திழை களிப்பொடுங் கொடுத்தார்.
93
(இ-ள்)
அவ்வாறு பிரயாணமானவர்கள் தேவர்களின்
பொன்னுலகத்தைப் போலும் திருமக்கமா நகரத்தினுட்
புகுந்து வாசனையானது நீங்காது குடியிருக்கப் பெற்ற
கூந்தலைப் பொருந்திய ஆமினாவென்று சொல்லும்
கனிபோன்ற சொற்களை யுடையவர்களது சொர்ணத்தாலாய
வளையல்களை யணிந்த கைகளில் தேனானது நெகிழப் பெற்ற
தாமரையினது மெல்லிய மலர்போலும் செழிய பாதங்களையும்
செவ்வையான ஆபரணங்களையுமுடைய ஹலிமா அவர்கள் கஸ்தூரி
வாசனையும் அழகும் வளர்ந்து மேலாகவுயர்ந்த நபிகள்
பெருமான் முகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களை
மகிழ்ச்சியோடும் கொடுத்தார்கள்.
|