பக்கம் எண் :

சீறாப்புராணம்

166


முதற்பாகம்
 

     384. மடந்தையிற் சிறந்த வாமினா வென்னு

             மலர்கொடி முகம்மதை வாங்கி

        யிடம்பெறப் பிறழ்ந்து சிவந்தவே லென்னு

             மிணைவிழி முகத்தொடுஞ் சேர்த்திக்

        குடங்கையி லேந்தி மார்புறத் தழுவிக்

             குமுதவாய் முத்தமிட் டுவந்து

        கிடந்தன மனத்திற் றுயரெலா மகற்றிக்

             கிளர்தரு முவகையிற் குளிர்ந்தார்.

94

     (இ-ள்) ஹலிமா அவர்கள் அவ்வாறு கொடுக்க, பெண்களில் மேன்மை பெற்ற ஆமினாவென்று சொல்லும் பூங்கொடி யானவர்கள் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களைத் தங்களின் இருகைகளாலும் வாங்கி விசாலமாகப் பிரகாசித்துச் சிவந்த வேலாயுதமென்று சொல்லா நிற்கும் உபய நோக்கங்களையுடைய முகத்தோடுஞ் சேர்த்துப் பின்னர் உள்ளங்கைகளிலேந்தி நெஞ்சானது பொருந்தும்படி யணைத்துச் செவ்விய ஆம்பன் மலர்போலும் வாயினில் முத்தமிட்டு மகிழ்ச்சியடைந்து மனசின்கண் கிடந்தனவாகிய வருத்தங்க ளெல்லாவற்றையும் நீக்கி ஓங்கா நிற்கும் சந்தோஷத்தினால் சரீர முழுவதும் குளிர்ச்சியுற்றார்கள்.

 

     385. முலைச்சுமை கிடந்த சிற்றிடை திரண்ட

             முகிலெனுங் குழலாலி மாவை

        யிலைத்தளிர் விரல்கண் முதுகுறப் பொருந்த

             வின்னுயிர் பொருந்தல்போற் றழுவி

        நிலைத்தபொற் பாவை யெனவரு கிருத்தி

             நெறியுடன் பலமொழி புகழ்ந்து

        மலைத்தடம் புயத்தா ரீதையும் போற்றி

             மகிழ்ந்தன ராமினா வன்றே.

95

     (இ-ள்) அன்றியும், ஆமினா அவர்கள் முலைகளின் பாரமானது கிடக்கப்பெற்ற சிறிய மருங்குலையும் கூட்டமுற்ற மேகங்களென்று சொல்லா நிற்கும் கூந்தலையுமுடைய ஹலிமா அவர்களைத் தங்களின் இலைத்தளிர் போன்ற விரல்களானவை முதுகிற்படும்படி பொருந்தத் தங்களது இனிமையான ஜீவனானது உடலிற் பொருந்தும் விதமாகக் கட்டியணைத்து செல்வமானது மாறாது நிலைக்கப் பெற்ற இலக்குமியைப் போல அருகிலுட்காரச் செய்து ஒழுங்கோடும் பலவிதமான வார்த்தைகளைச் சொல்லித் துதித்து மலையைப் போலும் பெரிய தோள்களையுடைய ஆரிதவர்களையும் வாழ்த்தி மகிழ்ச்சி யடைந்தார்கள்.