முதற்பாகம்
386. நெய்நிணங் கமழ்ந்த செங்கதிர் வடிவே
னிருபர்கோ னப்துல்முத் தலிபு
மைந்நிறப் பாவைக் கயல்விழி யாலிமா
வந்தது கேட்டுவந் தடுத்து
மெய்நிறக் கதிர்முச் சுடரையு மழுக்கும்
விறன்முகம் மதுதனை யெடுத்துக்
கைநிறை பொருட்போ லிருவிழி குளிரக்
கண்டக மகிழ்ந்துடல் களித்தார்.
96
(இ-ள்)
நெய்யினது நிணமானது பரிமளிக்கப்பெற்ற சிவந்த
பிரகாசத்தையுடைய கூரிய வேற்படை தாங்கிய அரசராதிபரான
அப்துல் முத்தலிபவர்கள் கறுத்த நிறத்தையுடைய
பாவையாகிய கெண்டைமீன்போலும் விழிகளையுடைய ஹலிமா
அவர்கள் ஆமினா அவர்களின் வீட்டில் வந்து
சேர்ந்ததைக் கேள்வியுற்று ஆங்குவந்தடைந்து
சரீரத்தின்கண் பொருந்திய பிரகாசமாகிய கிரணங்கள்
சூரியன் சந்திரன் அக்கினி என்று சொல்லும்
முச்சுடர்களையும் மழுக்கா நிற்கும் வெற்றியையுடைய
நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைக் கையின்
கண் நிறைந்த பொருளைப் போல எடுத்து இரண்டு கண்களும்
குளிர்ச்சியடையும்படி பார்த்து மனங்களித்துத் தேக
மகிழ்ச்சியடைந்தார்கள்.
387. வடிவுறுஞ் சுடர்வே
லப்துல்முத் தலிபு
மரைமலர் மாமுக நோக்கிக்
கொடியென வயங்கு நுண்ணிடை யலிமா
கொவ்வையங் கனியிதழ் திறந்து
படியினி லெவர்க்குங் காணொணாப் புதுமைப்
பாலகன் முகம்மது தன்னான்
மிடிமையுந் தவிர்ந்தோம் பாக்கியம்
பெற்றோம்
வேண்டுவ பிறிதிலை யென்றார்.
97
(இ-ள்)
அப்போது கொடியைப் போலும் பிரகாசியா நிற்கும்
நுண்ணிய இடையினையுடைய ஹலிமா அவர்கள் அழகிய வொளிவு
தங்கிய வேலாயுதத்தையுடைய அப்துல் முத்தலிபவர்களின்
தாமரை மலர் போலும் பெருமை பொருந்திய முகத்தைப்
பார்த்துத் தங்களது அழகிய கொவ்வைக் கனியை நிகர்த்த
அதரங்களைத் திறந்து இவ்வுலகத்தின்கண் யாவர்கட்கும்
பார்க்க முடியாத அதிசயங்களையுடைய பாலகரான நபிமுகம்மது
சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களால் நாங்கள்
எங்களுக்குள்ள வறுமையும் நீங்கினோம்
செல்வத்தையுமடைந்தோம். இனி நாங்கள் விரும்பக்
கூடியவை வேறே யாதொன்று மில்லையென்று சொன்னார்கள்.
|