பக்கம் எண் :

சீறாப்புராணம்

1680


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அவ்வாறு சென்ற அவன் நீட்சியுற்ற நெருங்கிய வாரை ஒழுங்கானது பொருந்தும் வண்ணஞ் செப்பமாகக் கட்டிச் சத்தத்தை எழுப்புகின்ற பெரிய முரசத்தைக் கூனலையுடைய ஒட்டகையின் மீது ஏற்றித் தானு மேறிக் கொண்டு பார்த்தற் கருமையான முடிவற்ற புதுமையைக் கொண்ட மணத்தையுடைய வீதிகளில் நுழைந்து இங்குக் கூடினவர்கள் யாவர்களுங் கேளுங்களென்று சொல்லி அப்பாற் சொல்லுவான்.

 

4628. வல்லவ னுண்மைத் தூதர் பனீகுறை லாவென் போர்பாற்

     பல்லியம் பம்பப் போருக் கெழுந்தனர் படைக ளோடுஞ்

     செல்லுமி னசறு பாதை வணங்குமின் செறுநர் போரை

     வெல்லுமின் கிடையாக் கீர்த்தி வேண்டுமி னென்னச் சொன்னான்.

7

     (இ-ள்) எல்லா வல்லமைகளையு முடையவனான அல்லா ஜல்ல ஜலாலகுவத்த ஆலாவின் உண்மையான றசூலாகிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிசெய்யிதுனா செய்யிது ஹாமிது அஹ்மது மஹ்மூது முகம்மது முஸ்தபா காத்திமுலன்பியா சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் பனீக்குறைலாவென்று சொல்லப்பட்டவர்க ளிடத்துப் பல வாச்சியங்கள் முழங்கும் வண்ணம் யுத்தத்திற்காக எழும்பினார்கள். ஆதலால் நீங்கள் யாவர்களும் உங்களது ஆயுதங்களோடும் போகுங்கள். அசறினது வழி வகையாகிய தொழுகையைத் தொழுங்கள். சத்துராதிகளான அக்காபிர்களின் யுத்தத்தை வெல்லுங்கள். ஒரு காலத்திலும் அடைதற் கருமையான புகழைக் கொள்ளுங்களென்று சொன்னான்.

 

4629. மோடடுமா முரசங் கொட்டி முறைமுறை யினைய சாற்றக்

     கேட்டலும் பிரிய முற்றி யாவருங் கிளர்ந்து பொங்க

     வாட்டமி னகர மென்னும் வாரியாங் குடைத்து மீறி

     வேட்டலுற் றெழுந்த தென்ன வெழுந்தது சேனை வெள்ளம்.

8

     (இ-ள்) அவன் பெருமை பொருந்திய அழகிய அந்த முரசத்தை அவ்வாறு அடித்து வரிசை வரிசையாக இத்தன்மையான சமாச்சாரங்களைச் சொல்ல, அதை அனைவரும் விருப்பமுற்றுக் கேட்டவளவில் கிளர்ந்து ஓங்க, மெலிதலற்ற அந்தத் திருமதீனமா நகரமென்று சொல்லுஞ் சமுத்திரமானது உடைத்து அதிகரித்து அங்கே எழும்பினாற் போலுஞ் சேனாசமுத்திரமானது விருப்பமாய் எழும்பிற்று.

 

4630. வீரமுந் தவமும் வாய்த்த மெய்மையு மறிவு நீதி

     வாரமு நெஞ்சிற் கொண்டு வரும்புலி யலிமுன் வெற்றி

     சாரும்வெண் கொடியொன் றேகச் சார்ந்தனர் தானை சூழ

     வாரண நயினார் பின்ன ராதிதன் னருளிற் போனார்.

9