பக்கம் எண் :

சீறாப்புராணம்

1681


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அவ்வாறு எழும்ப, வீரமும் தவமும் வாய்க்கப் பெற்ற சத்தியத்தையும, ஞானத்தையும், நியாயத்தையும், அன்பையும், இதயத்தின் கண் கொண்டு வந்த புலியாகிய அலி றலியல்லாகு அன்கு அவர்கள் முன்னால் வெற்றி பொருந்திய ஒப்பற்ற வெள்ளிய கொடியானது செல்லவும், பக்கத்திற் சைனியங்கள் வளைந்து வரவுஞ் சென்றார்கள். அதன் பின்பு புறுக்கானுல் மஜீதென்னும் வேதத்தையுடைய நயினாரான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிசெய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் யாவருக்கும் முதன்மையனான அல்லா ஜல்ல ஜலாலகுவத்த ஆலாவின் திருவருளாற் சென்றார்கள்.

 

4631. அருமறை யுணருந் தீனன் சாரிக ளெவருஞ் சூழக்

     கருமுகி லிடியே றென்னப் பல்லியங் கலிப்ப நாளுந்

     தரையிடை வணக்கஞ் செய்து நெற்றியுந் தழும்பு கொண்ட

     மருமலி வாகைத் திண்டோன் மன்னவர் சகுதும் போனார்.

10

     (இ-ள்) அவர்கள் அவ்வாறு செல்ல, அருமையான புறுக்கானுல் கரீமென்னும் வேதத்தை யுணர்ந்த தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம்மார்க்கத்தை யுடைய அன்சாரீன்க ளனைவருஞ் சூழவும், கரிய மேகத்தினிடத் தொலிக்கா நிற்கும் இடியேற்றைப் போலப் பல வாச்சியங்கள் முழங்கவும், பிரதி தினமும் இப்பூமியின் கண் தொழுது நெற்றியுந் தழும்பைக் கொண்ட பரிமள மதிகரித்த வெற்றி மாலையைத் தரித்த திண்ணிய புயங்களையுடைய அரசரான சகுது றலியல்லாகு அன்கு அவர்களுஞ் சென்றார்கள்.

 

கலிநிலைத் துறை

 

4632. தெரிப னீகுறை லாசெறி கூட்டத்தைத் தேடிப்

     பொருமஸ் காபிக ளியாவரு மொருமுகம் போதப்

     பெருகுந் தூளியின் படலமுன் பிறங்குவ கண்டு

     மரும லர்த்தொடை முகம்மதை வினவினர் மகிழ்ந்தே.

1

     (இ-ள்) அவ்வாறு தெரிந்த பனீக்குறைலாக்கள் நெருங்கிய கூட்டத்தை விசாரித்துப் பொருதுகின்ற அஸ்ஹாபிமார்க ளனைவரும் ஒரு புறமாகச் செல்ல, அவர்கள் தங்களுக்கு முன்னே அதிகரியா நிற்குந் தூசியின் படலமானது பிறங்குவதைப் பார்த்துச் சந்தோஷித்து வாசனையைக் கொண்ட புஷ்பத்தினாற் செய்யப்பட்ட மாலையைத் தரித்த நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிசெய்யிதுனா செய்யிதுல் குறைஷிய்யாக் காத்திமுல் அன்பியா அஹ்மது முஜ்தபா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களைக் கேட்டார்கள்.