பக்கம் எண் :

சீறாப்புராணம்

1688


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அவர் உண்மையாய்ச் சொல்லும் வார்த்தையானது எமக்குப் போதும், உங்களுக்கும் போதுமா? என்று கேட்க, அதற்கு அவர்கள் அதை ஆசையாய் ஏற்றுக் கொள்ள, மஆது என்பவரது புதல்வரான கீர்த்தியையுடைய குற்றமற்ற சகுது என்பவரோடு  சொல்லுவோமென்று சொன்னார்கள்.

 

4652. மெத்த நன்றென் றவர்கள் வியப்பக்கோ

     றைத்த காயந் திகழ்கர சஃதுவை

     முத்த மீன்ற முகம்ம தருட்படி

     யத்த லத்தி லழைத்துவந் தார்களே.

31

(இ-ள்) அதற்கு அவர்கள் மிகவும் நல்லதென்று புகழ, அம்புத்தைத்த புண்ணானது பிரகாசிக்கின்ற கையை யுடைய அந்தச் சகுது றலியல்லாகு அன்கு அவர்களை முத்தமாகப் பெற்ற நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபுறப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களது அருளின் வண்ணம் அந்த இடத்திற் கூட்டிக் கொண்டு வந்தார்கள்.

 

4653. மகாது மைந்தர் வரஅஸ் காபிகா

     ளஃது நுந்தலை வர்க்கறை வீரென

     முகம்ம தோத முரண்டெவ்வர் செய்தியைச்

     சகுது வுக்கவர் தோற்றுபு சாற்றினார்.

32

      (இ-ள்) அவ்வாறு மஆதென்பவரது புதல்வரான அந்தச் சகுது றலியல்லாகு அன்கு அவர்கள் வர, நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிசெய்யிதுனா செய்யிதுல் குறைஷிய்யா காத்திமுல் அன்பியா அஹ்மது முஜ்தபா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அசுஹாபிகளே! நீங்கள் அதை உங்களது தலைவரான இவருக்குச் சொல்லுங்களென்று சொல்ல, மாறுபாட்டைக் கொண்ட சத்துராதிகளாகிய அந்தக் காபிர்களது சமாச்சாரத்தை அவர்கள் தோன்றி அந்தச் சகுது றலியல்லாகு அன்கு அவர்களுக்குச் சொன்னார்கள்.

 

4654. சாற்று மம்மொழி கேட்டந்த சகுதுவு

     மாற்ற மின்றியீ மான்வழி நின்றிலார்க்

     கேற்ற மாமுற வேதின மேதவ

     ராற்ற லேதரு ளேதற மேதரோ.

33

      (இ-ள்) அவ்வாறு சொல்லிய அந்த வார்த்தையை அந்தச் சகுது றலியல்லாகு அன்கு அவர்களுங் கேள்வியுற்று விரோதமில்லாமல் ஈமானது மார்க்கத்தில் நில்லாதவர்களுக்கு மேன்மையாகிய உறவு ஏது? இனம் ஏது? அவர்களது ஆற்றல் ஏது? தயவு ஏது? ஒன்றுமில்லை.