பக்கம் எண் :

சீறாப்புராணம்

17


முதற்பாகம்
 

நாக்கினாற் றெரிந்த வேதத்தைப் பெய்து நான்கு மதுஹ பாக்கினவர்களும், நீதத்தை யுடையவர்களும், பொருந்திய அறிவை உடையவர்களும், குருவினது ஒழுங்கான தகைமை யானவர்களுமாகிய வேதவான்களென்று கூறும் நான்கிமாம்களின் திருவடிகளை மேலும் நாம் துதிக்க வேண்டும்.

 

வேறு

 

16. உரமுறு தீன்பா ரெல்லா மொளிரவே விளக்கஞ் செய்யுந்

   துரமுறு மவுலி யாவாய்த் தோன்றின பேர்க்கு மேலாம்

   வரமுறு முகியித் தீன்செம் மலரடி யிரண்டு மென்றன்

   சிரமிசை யிருத்தி வாழ்த்திச் செந்தமிழ்ப் பனுவல் செய்வேன்.

16

பதவுரை

      உரம் உறும் தீன் - வலிமை பொருந்திய தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்தை, பார் எல்லாம் - பூமி முழுவதும், ஒளிரவே விளக்கம் செய்யும் - பிரகாசிக்கும்படி விளக்கஞ் செய்த, துரம்உறும் அவுலியா ஆய் - பொறுப்பைச் சார்ந்த அவுலியாவாக, தோன்றின பேர்க்கு மேல் ஆம் - உதய மானவர்களுக்கு மேலாகிய, வரம் உறும் முகியித்தீன் - வரத்தை யுற்ற முகியித்தீனென்னும் காரணப் பெயரையுடைய செய்யிதுனா அப்துல் காதிறுல் ஜெயிலானி கத்த சல்லாகு சிர்றகு அவர்களின், செம்மலர் அடி இரண்டும் - சிவந்த தாமரை மலரை நிகர்த்த இரு பாதங்களையும், என்தன் சிரம் மிசை - எனது தலையின் மீது, இருத்தி வாழ்த்தி - இருக்கச் செய்து துதித்து, செம்தமிழ் பனுவல் செய்வேன் - அழகிய தமிழினது இந்நூலைச் செய்ய ஆரம்பிக்கின்றேன்.

 

பொழிப்புரை

     வலிமை பொருந்திய தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்தைப் பூமி முழுவதும் பிரகாசிக்கும்படி விளக்கஞ் செய்த பொறுப்பைச் சார்ந்த அவுலியாவாக உதய மானவர்களுக்கு மேலாகிய வரத்தையுற்ற முகியித்தீனென்னும் காரணப் பெயரை உடைய செய்யிதுனா அப்துல் காதிறுல் ஜெயிலானி கத்த சல்லாகு சிர்றகு அவர்களின் சிவந்த தாமரை மலரை நிகர்த்த இரு பாதங்களையும், எனது தலையின் மீது இருக்கச் செய்து துதித்து அழகிய தமிழினது இந்நூலைச் செய்ய ஆரம்பிக்கின்றேன்.

 

வேறு

 

17. நம்மையா ளுடையான் வேத நபிதிரு வசனந் தீனோர்

   சம்மதித் திடப்பா ரெல்லாந் தழைக்கவே விளக்கஞ் செய்தோ

   ரிம்மையு மறுமை யும்பே றிலங்கிய சதக்கத் துல்லா

   செம்மல ரடியி ரண்டுஞ் சிந்தையி லிருத்தி னேனே.

17