பக்கம் எண் :

சீறாப்புராணம்

1742


இரண்டாம் பாகம்
 

செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அந்தக் கவுலத்து றலியல்லாகு அன்ஹா அவர்களைப் பார்த்துப் பூங்கொத்துக்களலர்ந்த கூந்தலையுடைய கவுலத்தே! எம்மால் உங்களைச் சேர்ப்பது அருமையான காரியமென்று சொன்னார்கள்.

 

4790. அகுமதாண் டுரைத்த வார்த்தை யகமதி னூடே காய

     மகவுக டம்மைப் பார்த்து வாய்திறந் தழுது நொந்து

     சகதல முழுது நின்ற தனிப்பெரும் பொருளை யுன்னி

     யிகலறு மொழிகள் கூறித் துவாவிரந் திரங்கி நின்றாள்.

10

     (இ-ள்) அஹ்மதென்னுந் திருநாமத்தையுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அவ்விடத்தில் அவ்வாறு சொல்லிய வார்த்தையானது அந்தக் கவுலத்து றலியல்லாகு அன்ஹா அவர்களது மனதின் கண் வெப்பத்தைச் செய்ய, அவர்கள் தங்களது புத்திரர்களை நோக்கி வாயைத் திறந்து அழுது வருந்தி இப்பூமியினிடங்க ளெல்லாவற்றிலுந் தங்கிய ஒப்பற்ற பெரிய பொருளாகிய அல்லாஜல்ல ஜலாலகுவத்த ஆலாவை மனதின்கண் சிந்தித்து விரோதமற்ற வார்த்தைகளைச் சொல்லித் துஆக்கேட்டுக் கசிந்து நின்றார்கள்.

 

4791. இப்படி யிரங்கி நிற்கு மேல்வையி னான வாச

     மெய்ப்படு மிறசூ லுல்லா விரும்பிநீ ராடு முன்ன

     ரொப்பிலா னருளி னாலே யும்பரி னிருந்து நீதி

     செப்பிய வாயத் தொன்று திகழுற விறங்கிற் றன்றே.

11

     (இ-ள்) அவர்கள் இந்தப் பிரகாரங் கசிந்து நிற்கின்ற சமயத்தில், கஸ்தூரி வாசனை பொருந்திய தேகத்தையுடைய அல்லாஜல்ல ஷகுனகுவத்த ஆலாவின் றசூலாகிய நமது நாயகம் நபிகட் பெருமானார். நபி செய்யிதுனா செய்யிதுல் குறைஷிய்யா காத்திமுல் அன்பியா அஹ்மது முஜ்தபா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் பிரியமுற்று ஸ்நானஞ்செய்வதற்கு முன்னர் உவமானமற்றவனான அல்லா ஜல்ல ஜலாலகுவத்த ஆலாவின் கிருபையினால் தேவலோகத்தின் கண்ணிருந்து நியாயத்தைக் கூறுகின்ற ஓர் வேதவசனமானது பிரகாசிக்கும் வண்ண மிறங்கிற்று.

 

4792. அழுதுமெய் பதறி வாடி யலமரல் மிகுத்துக் கண்ணீ

     ரொழுகநின் றுருகு வாளை யுவந்தரு கழைத்துக் கற்பின்

     வழுவிலாக் கொடியே நின்றன் மணமகற் கொணர்தி யென்றார்

     தொழுதவள் மகிழ்ந்து சென்று தூதர்முன் கூட்டி வந்தாள்.

12