இரண்டாம்
பாகம்
(இ-ள்) அவ்வாறு இறங்க, அழுது உடலானது
நடுக்கமுற்று மெலிந்து துன்பமதிகரித்துக் கண்ணீர்
சிந்தும் வண்ணம் நின்று உருகுபவர்களான அந்தக் கவுலத்து
றலியல்லாகு அன்ஹா அவர்களை விரும்பித் தங்களது
பக்கத்திற் கூப்பிட்டுக் கற்பினாற் களங்கமற்ற
கொடிபோலுங் கவுலத்தே! நீ உனது நாயகரை இங்கே கூட்டிக்
கொண்டு வாவென்று சொன்னார்கள். அவர்களும்
சந்தோஷித்து அவர்களை வணங்கிப் போய் றசூலான
அந்நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா
செய்யிது ஹாமிது அஹ்மது மஹ்மூது முகம்மது முஸ்தபா
காத்திமுல் அன்பியா சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களது
முன்னர்க் கூட்டிக் கொண்டு வந்தார்கள்.
4793. வரவவர்
தம்மை நோக்கி வந்தஆ யத்திலுள்ள
வுரைவழு வாமல் வள்ள
லுரைத்தன ரவனி மீதிற்
புரைதரு கோபந் தன்னாற்
புருடர்கள் மனைவி மாரை
வரையறத் தாய்நீ யென்று
வழுத்துந்தீ தகற்ற வேண்டில்.
13
(இ-ள்) அவ்வாறு கூட்டிக் கொண்டு வர,
அவர்களை வள்ளலான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி
செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன்
காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு
அலைகி வசல்ல மவர்கள் பார்த்துத் தங்களுக்கு வந்த
ஆயத்தாகிய வேதவசனத்திலுள்ள அருத்தமானது பிசகாமற்
சொன்னார்கள். அதாவது இவ்வுலகத்தின் கண் புருடர்கள்
தங்களது மனைவிமாரைக் குற்றத்தைத் தருகின்ற
கோபத்தினால் எல்லை யறும் வண்ணம் நீதாயென்று
சொல்லுங் குற்றத்தை நீக்க வேண்டுமானால்.
4794. அடிமைகொண்
டுரிமை யாக விட்டிட லவையின் றென்னி
லிடையறா திரண்டு மாதந்
தொடர்ந்துநோன் பிருக்க வேண்டுங்
கடவதற் குரிய ரன்றேற்
கருதிய வதிதி மாரென்
றடகுகூ ழைய மேற்போ ரறுபது
பெயரைக் கூவி.
14
(இ-ள்) அடிமை கொண்டு உரிமையாக
விட்டுவிடல் வேண்டும். அஃதில்லையானால் இரண்டு மாதம்
மாறாமல் தொடர்ந்து நோன்பிருக்க வேண்டும். அப்படிச்
செய்வதற்கும் உரியரல்லரேல் கருதுகின்ற பரதேசிகளென்று
இலைக்கறி, கூழாகிய இவைகளைப் பிச்சை வாங்குவோர்களான
அறுபது பேர்களைக் கூப்பிட்டு.
4795. தலைக்கொரு
படியா லுள்ள தவசமு மவருக் கீந்து
விலக்குதற் கடனா மென்று
வந்தது வேத மென்றா
ரலக்கணுற் றழுது நின்ற
வரிவைதன் மெலிவை யெல்லாஞ்
சொலக்கருத் துன்னி
வள்ளற் றூய்முகம் பார்த்துச் சொல்வாள்.
15
|