பக்கம் எண் :

சீறாப்புராணம்

1776


இரண்டாம் பாகம்
 

சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும் இவ்வுலகமானது மிகவுந் துதிக்கா நிற்கும் அசுஹாபிமார்களும் சிறுவர்களும் பெண்களும் அவ்வாறு போய் வாசனை பரிமளியா நிற்குஞ் சோலைகளையும் தடாகங்களின் கரைகளையும் மலைகளையுங் கடந்து பாதமானது பூமியிற் பரவக் காந்துகின்ற அருமையான தன்மையையுடைய பாலை நிலத்தைப் பார்த்தார்கள்.

 

கலிவிருத்தம்

 

4890. செம்பென வயங்கியழல் செய்ந்நில மனைத்தும்

     வெம்புகை பரந்ததென வேனல்க ணிரம்ப

     விம்பரி னுலர்ந்தர வெரிந்தமுரு டாகத்

     தம்பொறி யெனக்கதிர் தயங்குமணி மின்ன.

92

      (இ-ள்) அவ்வாறு பார்க்கச் செம்பைப் போலும் பிரகாசித்து வெப்பத்தைச் செய்கின்ற அந்தப் பூமி முழுதும் வெவ்விய புகையானது பரவிற்றென்று சொல்லும் வண்ணம் வேனல்கள் நிரம்பவும், இவ்விடத்திலுலர்ந்து வெந்த சர்ப்பங்களினது விறகை யொத்த தேகத்திலுள்ள புள்ளிகளைப் போலும் பிரகாசத்தை வீசுகின்ற இரத்தினங்கள் ஒளிரவும்.

 

4891. தேறரிய தாகவெகு சீழுதிர மோடக்

      கூறுபடு புண்ணிலொரு கோலிடுதல் போல

      மீறுபர லாலடி மெலிந்தவர் களாவி

      சூறையிடல் போலவழல் சூறைவளி வீச.

93

      (இ-ள்) தேறுதற் கருமையாக மிகவுஞ் சீழு மிரத்தமு மோடும் படி கூறுபட்ட இரணத்தின் மீது ஒரு கொம்பை இட்டது போலும் ஓங்கா நிற்கும் பரற்கற்களினாற் பாதங்கள் வருந்தினவர்களது பிராணனைக் கொள்ளை கொள்ளுவதைப் போல வெப்பத்தைச் செய்கின்ற சூறைக் காற்று வீசவும்.

 

4892. சொரியவறல் வாரிவெகு சோனைபொழி மேகம்

     விரியுமழ றாவுதரை மீதுவர வஞ்சு

     முரியநில மீதுகரு வென்றுடல்வெ தும்பி

     யரியகரி யென்றுபெய ரானமத யானை.

94

      (இ-ள்) மிகவும் விடாமழையைப் பொழிகின்ற மேகமானது சமுத்திரத்தினது நீரை அள்ளிப் பொழிய, அந்நீரானது விரிந்த அழல் தாவுகின்ற அந்தப் பாலை நிலத்தின் கண் வருவதற்குப் பயப்படும். மதத்தைக் கொண்ட யானைகள் உரிமையான அந்த நிலத்தின் கண் கருவென்று தனது சரீரமானது வெதும்பப் பெற்று அரிய கரியென நாமமாயிற்று.