இரண்டாம்
பாகம்
4905. நனைமலர் ததும்புந்
திண்டோ ணபியுளம் வெதும்பக் கேட்டுச்
சினைதரு தருவி னீழற் செறிந்தினி திருந்து மிக்க
மனைசெறி மக்கத் துற்ற வன்குபிர்த் தலைவ ரான
வனைவரை யொருங்கு செற்றிங் கடைவது கரும மம்மா.
107
(இ-ள்) அவ்வாறுண்டாக, அவ்வார்த்தையை
மதுவைக் கொண்ட புஷ்பத்தினாற் செய்யப்பட்ட
மாலைகளசைகின்ற திண்ணிய புயங்களையுடைய நமது நாயகம்
நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல்
குறைஷிய்யா காத்திமுல் அன்பியா அஹ்மது முஜ்தபா முகம்மது
முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் மனமானது
வெதும்பும்படி கேள்வியுற்றுக் கிளைகளையுடைய ஒரு மரத்தினது
நிழலில் இனிமையோடும் நெருங்கி யிருந்து மிகுதியான
மாளிகைகள் நெருங்கிய திரு மக்கமா நகரத்திலிருக்கின்ற
கொடிய காபிர்களது தலைவர்களான யாவரையும் ஒன்றாய்க்
கொன்று இங்கே திரும்பி வருவது காரியமாகும்.
4906. ஆகையா
லெனது தோழ ரனைவரு மொருமித் தன்பாய்
வாகைநான் பெறுக வெற்கு வாய்மைதம் மின்க ளென்று
சாகைநூற் றழும்பு நாவார் கேட்பவார்த் தைப்பா டீதென்
றோகைமா றாத சான்றோர் கொடுத்தன ருளம கிழ்ந்தே.
108
(இ-ள்) ஆகையினால் எனது நேசர்களாகிய
நீங்களியாவரும் ஒருமித்து அன்பாய் யான் வெற்றிபெறும்
வண்ணம் எனக்குச் சத்தியஞ் செய்து தாருங்களென்று வேத
சாஸ்திரப் பிரசங்கத்தால் தழும்பைக் கொண்ட
நாவையுடைய நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா
செய்யிது ஹாமிது அஹ்மது மஹ்மூது முகம்மது முஸ்தபா
காத்திமுல் அன்பியா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல
மவர்கள் கேட்க, உவகையானது நீங்காத அறிஞர்களான அந்த
அசுஹாபிமார்கள் மனமகிழ்ந்து இதுவே சத்தியமென்று
சத்தியஞ் செய்து கொடுத்தார்கள்.
4907. சுரும்படை கிடக்குந்
தொங்கற் றூயவர் வாய்மை கேட்டுக்
கரும்படை கிடக்குந் தீஞ்சொற் கதிமறை கபீபன் பாகி
யரும்படை கிடக்கு மோடை யணிமதிண் மக்க மீதி
லிரும்படை கடக்கும் வேலீ ரெழுகவென் றியையுங் காலை.
109
(இ-ள்) வண்டுகள் நீங்காதிருக்கின்ற
மாலையை யணிந்த பரிசுத்தத்தையுடையவர்களான
அசுஹாபிமார்கள் அவ்வாறு சத்தியஞ் செய்து கொடுத்த
சத்திய வார்த்தையைக் கரும்பினது இரசத்தைப் போலும்
இனிமையானது மாறாதிருக்கின்ற
|