இரண்டாம்
பாகம்
4910. மான்மதங் கமழ்ந்து வீச
மலர்ப்பதம் பெயர்த் தெழுந்து
தேனுறை யலங்கற் றிண்டோட் செல்வரோ டேகுங் காலை
யீனமி லாயத் தொன்றங் கிறங்கின கயவர் மீதில்
தீனவ ரெவர்க்கு மன்பாய்க் கொடுத்தனஞ் செயம தென்றே.
112
(இ-ள்) அவ்வாறு சொல்லி அவர்கள் கஸ்தூரி
வாசனையானது பரிமளித்து வீசும் வண்ணம் தாமரைப்
புஷ்பத்தையொத்த தங்கள் திருவடிகளைப் பூமியை விட்டும்
பெயர்த்து எழும்பி மதுவானது தங்கிய மாலையையணிந்த
திண்ணிய தோள்களையுடைய செல்வரான அசுஹாபிமார்களோடு
செல்லுகின்ற சமயத்தில், கீழ்மக்களாகிய காபிர்கள்
மீது தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம்மார்க்கத்தையுடைய
முஸ்லிம்களியாவருக்கும் அன்பாய் வெற்றியைக்
கொடுத்தேமென்று அங்குக் களங்கமற்ற ஒருவேதவசனமானது
இறங்கிற்று.
4911. கதிமறை வசனங் கேட்ட
காவலர் நபியுல் லாவும்
விதியவன் மொழிம றாத விறலுடைத் தலைவ ரியாரு
மதியக டுரிஞ்சுங் குன்றும் வளர்கழைக் காடு நீந்திப்
பதியினுக் கரசாய் வைகும் பணைமதீ னாவிற் சென்றார்.
113
(இ-ள்) மோட்சத்தைத் தருகின்ற
புறுக்கானுல் அலீமென்னும் வேதவசனத்தை அவ்வாறு
கேள்வியுற்ற காவலரான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின்
நபியாகிய நமது நாயகம் நபிகட் பெருமானார் செய்யிதுனா
செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன் காத்திமுல்
அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல
மவர்களும் ஹக்கு சுபுகானகுவத்த ஆலாவினது கட்டளையிற்
பிசகாத வெற்றியையுடைய தலைவர்களான அசுஹாபிமார்க
ளனைவர்களும் சந்திரனது அகட்டைத் தேய்க்கா நிற்கும்
மலைகளையும் ஓங்கிய மூங்கிலையுடைய வனங்களையுங் கடந்து
நகரங்களுக்கெல்லாம் நாயகமாயுறைந்த வயல்களையுடைய திரு
மதீனமா நகரத்தின் கண் வந்து சேர்ந்தார்கள்.
|