பக்கம் எண் :

சீறாப்புராணம்

1784


இரண்டாம் பாகம்
 

சல்மா பொருத படலம்

 

அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்

 

4912. விண்ணவர்க் கரசர் நாளும் விரும்பியர்ச் சனைசெய் தேத்த

     வெண்ணரு மரச ரீண்டி யேவலி னிறைஞ்சி நிற்பப்

     பண்ணரு மறையின் றீஞ்சொற் பாவல ரினிது வாழ்த்தக்

     கண்ணகன் ஞாலம் போற்றுங் காவல ரிருந்தா ரிப்பால்.

1

      (இ-ள்) இடமகன்ற இவ்வுலகமானது புகழா நிற்கும் அரசரான நமது நாயகம், எம்மறைக்குந் தாயகம், நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன், ஹபீபு றப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் தேவர்களான மலாயிக்கத்துமார்களுக்கு அதிபதியாகிய ஜிபுரீலலைகிஸ்ஸலாமவர்கள் பிரதிதினமும் நாட்டமுற்றுப் பூசித்துப் புகழவும், கணக்கிடுதற் கருமையான இராசர்கள் ஒன்றுகூடிப் பணிவிடையோடு தொழுது நிற்கவும், கீதத்தைக் கொண்ட அரிய புறுக்கானுல் மஜீதென்னும் வேதத்தினது இனிய வார்த்தைகளால் வித்துவான்கள் இனிமையோடு போற்றவும் திரு மதீனமா நகரத்தின் கண் இருந்தார்கள். 

 

4913. வரைநிகர் மாட மோங்கு மக்கமா புரத்துள் ளோர்கள்

     கரையிலா வளமை சேருங் கடுநகர் மதீனத் தெய்தத்

     தரைநெறி மறாத தீனன் சாரிகண் மக்கத் தேகப்

     புரையற வுள்ள மொன்றாய்ப் பொருந்தின ருறவ தாகி.

2

      (இ-ள்) மலைகளையொத்த மாளிகைகள் ஓங்கா நிற்கும் திரு மக்கமா நகரத்தி லுள்ளவர்கள் எல்லையில்லாத செல்வத்தைப் பொருந்திய காவலையுடைய திரு மதீனமா நகரத்திற்கு வரவும், இப்பூமியின் கண் சன்மார்க்கத்திற் பிசகாத தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம்மார்க்கத்தையுடைய அன்சாரீன்கள் திரு மக்கமா நகரத்திற்குப் போகவும், இவ்வாறு அவர்கள் மனமானது களங்கமற ஒன்றுபட்டு நேசர்களாய்ச் சேர்ந்தார்கள்.

 

கலிவிருத்தம்

 

4914. செருவி னாற்பொரு தடர்ந்துதீ னெறிமுறை மறையின்

     மருவி நல்வழி வந்தவர்க் கெண்மடங் காகப்

     பரிவி னாலிசு லாமினிற் புகவெனும் படியா

     லரிய திண்டிறல் வயவர்கள் வந்தன ரவரின்.

3