பக்கம் எண் :

சீறாப்புராணம்

1786


இரண்டாம் பாகம்
 

புறுக்கானுல் கரீமென்னும் வேதத்தினது “லாயிலாஹ இல்லல்லாகு முகம்மதுர் றசூலுல்லாஹி” யென்னுங் கலிமாவைச் சொல்லச் சொல்லித் தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம்மார்க்கத்தின் நிலையில் நின்றார்கள்.

 

கலிநிலைத்துறை

 

4917. இவர்கள் போலுயர்ந் தவர்கணம் பலவெழுந் தேகிக்

     கவர றக்கலி மாவினை யுரைத்துளங் களித்துப்

     பவம றுந்தொழு கையின்முறை வழிநெறி பயின்றே

     யுவமை யில்லவன் றூதடி வணங்கியங் குறைந்தார்.

6

      (இ-ள்) அவர்கள் அவ்வாறு நிற்க, இவர்களைப் போன்ற மேலானவர்களது கூட்டமானது பல எழும்பிப் போய்ப் பிரிவினைக் கொண்ட எண்ணமானது அறும் வண்ணம் “லாயிலாஹ இல்லல்லாஹூ முகம்மதுர் றசூலுல்லாஹி யென்னுங் கலிமாவைச் சொல்லி மனமானது சந்தோஷிக்கப்பெற்றுப் பாதக மறுகின்ற தொழுகையினது ஒழுங்காகிய பாதைகளை முறையோடுங் கற்று ஒப்பில்லாதவனான அல்லாஜல்ல ஜலாலகுவத்த ஆலாவின் றசூலான நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிது ஹாமிது அஹ்மது மஹ்மூது முகம்மது முஸ்தபா காத்திமுல் அன்பியா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களது பாதங்களைத் தொழுது அங்கே தங்கி யிருந்தார்கள்.

 

அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்

 

4918. வினைபுறங் கண்ட வேற்கை விறனபி மகிழ்ந்தன் பாகிக்

     கனைகழல் சல்மா வென்னுங் காளைதன் வதன நோக்கி

     மனையினுக் குரிய னாக வந்தவன் றபாகும் வெற்றிப்

     புனைமல ரணியுந் திண்டோட் பொதுவனு நீரு மாக.

7

      (இ-ள்) அவர்கள் அவ்வாறிருக்க, எதிர்த்த யுத்தத்தைத் தோற்றோடும்படி செய்த வேலாயுதத்தைத் தாங்கிய கையையுடைய விஜயத்தைக் கொண்ட நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் களித்து அன்பாகி ஒலிக்கின்ற வீர்க்கழலைத் தரித்த சல்மா றலியல்லாகு அன்கு என்று சொல்லும் வாலிபரது முகத்தைப் பார்த்து நீரும் வீட்டிற்குரியவனாக வந்தவனான றபாகென்பவனும் புஷ்பத்தினால் அலங்கரிக்கப்பட்ட வெற்றிமாலையைத் தரித்த திண்ணிய தோள்களையுடைய பொதுவனுமாக.