பக்கம் எண் :

சீறாப்புராணம்

1789


இரண்டாம் பாகம்
 

4924. நிரைநிரை செறிந்த குட்டியுங் கன்று

         நெடுங்கழுத் தொருத்தலுஞ் சுரந்த

     சுரைமடி வீங்கி நடைபெயர்த் தொதுங்குஞ்

         சுரபியும் புனிற்றிளந் தேனும்

     விரைமலர் குவளை மணமறாக் கயவாய்

         மேதியுங் கவையடிக் கொறியுந்

     திரையென வெழுந்து நடந்துபுன் மேய்ந்து

         திரிந்தது திசைதிசை செறிந்தே.

13

      (இ-ள்) அவ்வாறு சேர, கூட்டங்கூட்டமாகக் கூடிய குட்டிகளும் கன்றுகளும், நீண்ட கழுத்தையுடைய ஒட்டகங்களும், பாலானது ஊறிய முலைகளைக் கொண்ட மடியானது பருத்துத் தனது நடையைப் பெயர்த்து ஒதுங்குகின்ற பசுக்களும், அப்பசுக்களின் மிகவும் இளமைப் பருவத்தைக் கொண்ட குட்டிகளும் வாசனையைக் கொண்ட குவளைப் புஷ்பத்தினது மணமானது நீங்காத பெரிய வாயையுடைய எருமைகளும், பிளந்த பாதங்களையுடைய ஆடுகளும், கடலைப் போலுமெழும்பி எல்லாத் திசைகளிலும் நெருங்கி நடந்து புற்களை மேய்ந்து கொண்டு திரிந்தன.

 

4925. பணர்விரிந் தடைகள் செறிந்திருண் டெழுந்த

         பாரரைப் பாதவ மிடத்து

     மணமெழுந் தலர்ந்த முள்ளரைப் பசுந்தாள்

         வனசமேய்ந் திலங்குபல் வலத்துந்

     துணர்வளைந் தோடிப் பாசடை கிடக்குந்

         துய்யதோர் பசும்புலி னிடமுங்

     கணமுடன் றொருக்கண் மேய்த்தவ ணுறைந்தார்

         காளையர் மூவரு மன்றே.

14

      (இ-ள்) வாலிபர்களான அவர்கள் மூன்று பேருர்களும் மரக்கிளைகள் விரிந்து இலைகள் ஒன்றோடொன்று நெருங்கி யிருட்சியுற்று எழும்பிய பருமையான அரையைக் கொண்ட மரங்களையுடைய தோப்புகளினிடத்தும், வாசனையானது எழும்பிப் பரவிய முட்களைக் கொண்ட அரையாகிய பசிய தாட்களையுடைய தாமரைப் புஷ்பங்கள் பொருந்திப் பிரகாசியா நிற்கும் வாவிகளிடத்தும், பூங்கொத்துக்கள் வளைந்து ஓடிப் பசிய இலைகள் கிடக்கின்ற பரிசுத்தமான ஒப்பற்ற பசிய புற்களினிடத்தும் கூட்டத்தோடும் அந்தப் பசுக்களை மேய்த்து அங்கே தங்கியிருந்தார்கள்.