பக்கம் எண் :

சீறாப்புராணம்

1795


இரண்டாம் பாகம்
 

வலிமையைக் கொண்ட குதிரைகளையுடைய அரசர்களான அந்தக் காபிர்கள் நடக்க, அவர்களைப் பின்பற்றிக் கொடிய கயிற்றால் முறுக்கிக் கழுத்திற் கட்டிய கோதண்டத்தை யாவரும் ஆச்சரியப்படும்படி எடுத்தார்கள்.

 

4937. இருகடை வளைத்தங் கொருசிலை யேந்தி

         யெதிர்பொருங் காபிரை நோக்கிக்

     கரியமை முகிலி னுருமென விட்டார்

         விட்டவக் கடுஞ்சரஞ் சென்று

     பொருதிறல் வயவர் தலைகளைத் தள்ளிப்

         புரவியி னகட்டினைப் பிளந்து

     வருகுடை மன்னர் முடியினை வீழ்த்திப்

         போயது மறிபடா தன்றே.

26

      (இ-ள்) அவ்வாறெடுத்து இரண்டு பக்கத்தினது கடைகளையும் வளையும்படி செய்து ஒரு அம்பை அதிலேந்தித் தங்களுக்கு எதிராக அங்கே பொருதுகின்ற அந்தக் காபிர்களைப் பார்த்து நீரைக் கொண்ட கரிய மேகத்தினது இடியைப் போலும் விட்டார்கள். அப்படி விட்ட அந்தக் கொடிய அம்பானது போய் யுத்தஞ் செய்கின்ற வலிமையையுடைய வீரர்களான அந்தக் காபிர்களது சிரங்களைப் பூமியில் தள்ளிக் குதிரைகளின் வயிறுகளைப் போழ்ந்து கவிகையில் வந்த அரசர்களது கிரீடங்களைப் பூமியில் விழும்படி செய்து மறிபடாமற் சென்றது.

 

4938. சரம்பட வெகுண்டு வயவரெல் லோருந்

        தழலெழ விருவிழி சிவந்து

     கரம்பெறும் பரசு கப்பணஞ் சொட்டை

        கட்டுபத் திரமயி னேமி

     யுரம்பெறும் பால நெட்டிலைச் சூல

        மோங்குதோ மரங்கதி ரெழுவாள்

     பரம்பரி நடத்தி யாவுங்கொண் டெறிந்தார்

        படியுமை முகின்மழை போல.

27

      (இ-ள்) அவ்வாறு அந்த அம்பானது பட, வீரர்களான அந்தக் காபிர்க ளியாவருங் கோபித்து இரு கண்களும் நெருப்பானது எழும்பும் வண்ணஞ் செந்நிறமடைந்து கையிற் பொருந்திய கோடாரி, கை வேல், சொட்டை, கட்டிய அம்புகள், வேல், சக்கரம், வலிமை பெற்ற மழு, நீண்ட இலைகளையுடைய சூலம், ஓங்கா நிற்கும் தண்டம், பிரகாசமானது ஓங்குகின்ற வாள், கேடகமாகிய யாவுங் கொண்டு தங்களது குதிரைகளை நடத்திக் கருமைபடிந்த மேகத்தினது மழையைப் போலும் வீசினார்கள்.