பக்கம் எண் :

சீறாப்புராணம்

203


முதற்பாகம்
 

கண் பவளம் போலும் இனிமை தங்கிய வாயினையுடைய சிறிய பாலியர்கள் தங்களைச் சூழ்ந்து வரும்படி கரிய மேகத்தைப் போன்ற குடையினையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் ஒரு தடாகத்தின்கண் போய்ச் சேர்ந்தார்கள்.

 

488. பண்ணரு மறைநபி பாரிற் றோன்றியே

    நண்ணிய புனல்விளை யாட நாடுநா

    ளெண்ணுற வடுத்ததென் றிறங்கி வானதி

    மண்ணினிற் குடியிருந் தனைய வாவியே.

7

     (இ-ள்) அத்தடாகமானது இசை பொருந்திய அரிதான புறுகானுல் அலீமென்னும் வேதத்தினை யுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் இந்தப் பூலோகத்தின்கண் பிரசன்னமாகி பொருந்திய நீரில் விளையாடும்படி விரும்பும் நாளானது கணக்காக நெருங்கியதென்று சுவர்க்கலோகத்தின் கண்ணுள்ள ஹௌலுள் கௌதர் என்னும் ஆறு அங்கிருந்திறங்கி வந்த இப்பூமியின்கண் குடியாக இருந்ததைப் போன்றிருந்தது.

 

489. வடுவிழித் தடமுலை யார்கண் மாமத

    னடறரு முசைனயி னான்ற னாருயிர்க்

    கடகரி யெனும்புல் காசீம் செல்வம்போ

    லிடனறப் பெருகியங் கிருந்த வாவியே.

8

     (இ-ள்) அன்றியும், அத்தடாகமானது வாளாயுதம் போன்ற கண்களையும் விசாலமுற்ற ஸ்தனபாரங்களையுமுடைய பெண்களுக்குப் பெருமை தங்கிய மன்மதனான வெற்றியைதரா நிற்கும் உசைன் நயினாரவர்களின் பொருந்திய உயிராகிய மதங்களையுடைய யானையென்று சொல்லும் இந்நூற்குக் கொடை நாயகரான அபுல்காசீ மரைக்காயரவர்களது செல்வத்தைப் போல அங்கு இடமில்லா எவ்விடமும் பெருகியிருந்தது.

 

490. சேடுறு முகம்மது செவ்வி வாய்ப்பநீ

    ராடுவ திஃதென வாவி யம்புயம்

    பாடுறு மாசணு காது பைந்துண

    ரேடலர் போர்வைபோர்த் திருந்த தொத்ததே.

9

     (இ-ள்) அன்றியும், அத்தடாகத்தின் கண்ணுள்ள தாமரைகளானவை பெருமையமைந்த நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் அழகு பொருந்த ஸ்நானஞ் செய்யுங் குளமானது இஃதென்று சொல்லும்படி கேடுகளுற்ற யாதொரு குற்றமும் அணுகாது தங்களது பசுமைதங்கிய மகரந்தங்களையும் இதழ்களையுமுடைய புஷ்பங்களென்னும் போர்வையினால் மூடிக் கொண்டிருந்ததை யொத்திருந்தன.