முதற்பாகம்
491.
கரைதவழ் தென்றலங்
காலி னால்விரை
சொரிமலர் வாவிநீ
ரசைந்து தோன்றுவ
தரிதிரைக் கரங்களிற்
சங்க மார்த்திட
விருகரை முத்தெடுத்
தெறிதல் போலுமே.
10
(இ-ள்)
அன்றியும், கரைகளில் தவழா நிற்கும் அழகிய இளம் காற்றினால் தேனைச் சொரியா நின்ற புஷ்பங்களையுடைய
அத்தடாகத்தின் கண்ணுள்ள ஜலமானது அசைவுற்றுப் பிரகாசிப்பது ஒள்ளிய அலைகளென்னும் கைகளிற் சங்கினங்கள்
ஒலிக்கும்படி முத்துக்களை யெடுத்து இருகரைகளிலும் வீசுவதைப் போன்றிருந்தது.
492.
தேன்மலர்ச் சண்பகஞ்
செறிந்த நீழலும்
பானிறக் கதிர்மணற்
பரப்பு மன்னமுஞ்
சூன்முதிர் குடவளைத்
தொனியும் வைகிய
கான்மலர் வாவிகண்
களிப்ப நோக்கினார்.
11
(இ-ள்)
அப்போது மதுவானது நிறையப் பெற்ற புஷ்பங்களையுடைய நெருங்கிய சண்பகமரத்தினது நிழல்களும்,
பாலினது நிறத்தையொத்தப் பிரகாசம் பொருந்திய மணற்களினது பரப்பும், அன்னப்பட்சிகளும், கர்ப்பமானது
முற்றிய குடம் போன்ற
சங்கினங்களினது ஓசையும்
மாறாது குடியிருக்கப் பெற்ற வாசனை செறிந்த பூக்களையுடைய அந்தத் தடாகத்தை நபிமுகம்மது சல்லல்லாகு
அலைகிவசல்லமவர்கள் இரண்டு கண்களும் மகிழ்ச்சியடையும்படி பார்த்தார்கள்.
493.
மணிமுர சதிரறா
மதீன மாநகர்த்
திணிபுய வரசர்கள்
செல்வ ரியாவரும்
பணிமணி முகம்மது நிறைந்த
பங்கயத்
தணிதிகழ் வாவிநீ
ராட லுற்றனர்.
12
(இ-ள்)
அவ்விதம் பார்த்த இரத்தினாபரணங்களையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களும்
நவமணிகளழுத்திய முரசுகளின் ஓசையானது நீங்காத மதீனமா நகரத்தின் கண்ணுள்ள வலிமை தங்கிய
புயங்களையுடைய வேந்தர்களின் செல்வர்களான அப்பாலியர்களனைவரும், பெருகிய தாமரைகளின் அழகானது
பிரகாசியா நிற்கும் அத்தடாகத்தினது தீர்த்தத்தின்கண் ஸ்நானஞ்செய்ய ஆரம்பித்தார்கள்.
494.
நிறைதட மசைதலா னிகரி
லாமுத
லிறையவன் றூதர்நம்
மிடத்தின் மூழ்குறக்
குறைபடா வரியமெய்
குளிரு மோவென
நறைபுனல் கலங்கியுண்
ணடுங்கல் போன்றதே.
13
|