பக்கம் எண் :

சீறாப்புராணம்

205


முதற்பாகம்
 

      (இ-ள்) அவ்வாறு ஆரம்பிக்கவே பூரணப்பட்ட அந்தத் தடாகமானது அசைவதினால் யாவற்றிற்கும் ஆதிமன்னவனான ஒப்பில்லாத அல்லாகு சுபுகான குவத்த ஆலாவின் றசூல் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் நம்மிடத்தில் குளிக்க அவர்களின் குறைவுபடாத அரியதிருமேனியானது குளிர்ச்சி யடையுமோ? அடையாதோ வென்று அத்தடாகத்தின் கண்ணுள்ள வாசனை பொருந்திய நீரானது மனக்கலக்கமுற்று நடுக்கமடைவதைப் போன்றிருந்தது.

 

495. பம்புநீர் வாவிகண் குளிர்ந்திப் பாரிடை

    யெம்பெரு மானம திடத்தின் மூழ்கலாற்

    செம்பொனா டவர்க்குறாச் சீர்பெற் றோமெனக்

    கம்பித மம்புயக் கரங்கள் காட்டுமே.

14

     (இ-ள்) நெருங்கிய ஜலத்தினையுடைய அந்தத் தடாகமானது இப்பூலோகத்தினிடத்தில் எங்களது பெருமானான நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் கண்களானவை குளிர்ச்சி யடையப் பெற்று நமது பால் குளிப்பதனால் நாம் சிவந்த பொன்னுலகத்தை யுடையவர்களும் அடையாத சிறப்பையடைந்தோ மென்று சொல்லித் தனது தாமரைகளாகிய கைகளின் அசைவுகளைக் காட்டினது.

 

496. தங்கிய புனலிடை குளிப்பத் தத்துநீ

    ரெங்கணுங் கரைதவழ்ந் திழிந்து தோன்றுவ

    கங்கைதன் னுள்ளகங் களிப்புற் றானந்தம்

    பொங்கியே யுடற்புறம் பொசிவ போன்றதே.

15

     (இ-ள்) அன்றியும், அத்தடாகத்தினுள் தங்கிய நீரின்கண் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் மூழ்கவே அதனால் எவ்விடத்துங் குதிக்கா நிற்கும் அந்நீர் கரைகளில் தவழ்ந்து இழிதலுற்றுப் பிரகாசிப்பது, அத்தடாகமானது தனது மனசின்கண் மகிழ்ச்சியடைந்து சந்தோஷம் பெருகிச் சரீரத்தின் பக்கம் பொசிவதைப் போன்றிருந்தது.

 

497. வடிவுறு முகம்மது வாவித் தன்புன

    லிடைகுளித் துயர்தர விலங்கும் வான்முகம்

    படிமிசை யாயிரங் கலைகொள் பான்மதி

    கடலிடை முளைத்தெழுங் காட்சி போன்றதே.

16

     (இ-ள்) அன்றியும், அத்தடாகத்தினது குளிர்ச்சி பொருந்திய நீரின்கண் அழகு தங்கிய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் மூழ்கி எழும்பவே, பிரகாசிக்கும் அவர்களின் முகமானது ஆயிரங்கிரணங்களைக் கொண்ட