முதற்பாகம்
504.
வரிவளைத் தடம்புனை
மதீன மாநகர்க்
குரியவர் குபிரினி
லுறையெ கூதிக
ளரிதினிற் றடக்கரை
யடுத்துப் பூமழை
சொரிதல்கண் டகுமதைச்
சூழ்ந்து நோக்கினார்.
23
(இ-ள்)
அப்போது வரிகள் படர்ந்த சங்கினங்களையுடைய குளங்களைச் சூழ வணியப் பெற்ற அந்த மதீனமாநகரத்திற்குச்
சொந்தக்காரரான குபிரில் தங்கியிருக்கும் எகூதிகள் நபிகணாயகமவர்கள் ஸ்நானஞ் செய்த அத்தடாகத்தினது
கரையை மென்மையோடும் நெருங்கி ஆங்குப் புஷ்பமாரி பொழிவதைப் பார்த்து அஹ்மதென்னும் நபிமுகம்மது
சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களை வளைந்து உற்று நோக்கினார்கள்.
505.
பாலுறச் செழுங்கதிர்
பரப்பி மென்கணைக்
காலுற வளர்ந்தசெங்
கரமும் பொன்மலை
போலென வீங்கிய
புயமு மாமுகக்
கோலமுங் காட்சியென்
றுணர்ந்து கூறினார்.
24
(இ-ள்)
அவ்வாறு நோக்கிய எகூதிகள் வெண்மை நிறம் பொருந்தச் செழுமையான கிரணங்களை நானாபக்கமும்
விரித்து மெல்லிய கணக்காலில் வந்து பொருந்தும்படி வளர்ச்சியுற்ற சிவந்த கைகளையும், மகாமேரு
பருவத்தைப் போன்ற பணைத்த தோள்களையும், பெருமை தங்கிய முகத்தினது அழகையும் அற்புதமென்று தெரிந்து
ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள்.
506.
மண்ணகத் துதித்தமா
னுடன்கொ லோவலால்
விண்ணகத் தமரர்கள்
வேந்த னோவென
வெண்ணிய வெண்ணகத்
தடங்கி லாவெழி
லண்ணலைப் பார்த்தடுத்
தைய முற்றனர்.
25
(இ-ள்)
அவ்விதம் பேசிக் கொண்ட அந்த எகூதிகள் இப்புருடனானவன் இந்தப் பூமியின்கண் தோன்றிய மானிடர்களிலொருவனோ?
அல்லது தேவலோகத்தின் கண்ணுள்ள வானவர்களின் அரசனோ? என்று சொல்லி அவர்கள் மதித்த மதிப்பானது
அவர்களின் சிந்தையினுள் அடங்காது அழகிய பெருமையிற் சிறந்தோரான நபிமுகம்மது சல்லல்லாகு
அலைகிவசல்ல மவர்களை நெருங்கிப் பார்த்து சமுசயமடைந்தார்கள்.
507.
முத்திரை யொன்றுள
முழுது மெய்யினிற்
பத்திவிட் டொளிர்வன
பாதம் பாருறாச்
சித்திர நீழலுந் தெரியக்
காண்குறா
வித்திற நபியெனத்
துணிந்தி யற்றினார்.
26
|