பக்கம் எண் :

சீறாப்புராணம்

23


முதற்பாகம்
 

   யிலங்கு பைங்கனி சிதறிடத் தருக்களை யிடறி

   நலங்கொள் பைங்கதிர்க் கிரியிடை சரிந்தன நாரம்.

7

            (இ-ள்) அன்றியும், அம்மழை பெய்ததினா லுண்டாகிய நீரானவை மிருகக் கூட்டங்களைத் தனது குலத்துடனும் கூட்டத்துடனுந் துரத்திக் கலங்கா நிற்கும் அழகிய சிறகுகளையுடைய பட்சி சாதிகளெல்லாவற்றையுங் கலையும்படி செய்து ஒளிர்கின்ற பசிய பழங்களானவை சிதறும் வண்ணம் மரங்களைத் தடுக்கி நலத்தைக் கொண்ட பசுமை தங்கிய பிரகாசத்தை யுடைய அந்த மலையினிடத்துச் சாய்ந்தன.

 

                   எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

 

     28. வரிவிழிச் செவ்வாய்க் குறத்திய ரிதணு

             மனையையுந் தினையையும் வாரிப்

        புரிநரம் பிசையாழ் தொண்டகப் பறையும்  

             பொடிபடத் துறுகலின் மோதி

        விரிதலைக் குறவர் குழாத்தொடும் வெருட்டி

             விளைந்தமுக் கனிசத கோடி

        சரிதர வீழ்த்தி மரகதக் கிரணத்

             தடவரை யருவிகொண் டிறங்கும்.

8

     (இ-ள்) அவ்வாறு சாய்ந்த மரகதத்தினது பிரகாசத்தைக் கொண்ட அந்த பெரிய மலையின் அருவியானது இரேகைகள் படரப் பெற்ற கண்களையும் சிவந்த வாயையுமுடைய குறத்தியர்களின் பரணையும் வீட்டையும் தினையையும் வாரி முறுக்கமைந்த நரம்பினைக் கொண்ட யாழையும் குறிஞ்சிப் பறையையும், தூளாகும் வண்ணம் நெருங்கிய கற்களில் அடித்து விரிந்த சிரத்தை யுடைய குறவர்களைக் கூட்டத்தோடுந் துரத்தி, விளைந்த வாழை, பலா, மா வென்னு மூன்று விதப் பழங்களையும் நூறு கோடி யளவாய்ச் சரியும்படி விழுத்திக் கொண்டு தாழே இறங்கின.

 

     29. மலையெனு மரசன் புயங்களைத் தழுவி

             மகிழ்ச்சிசெய் தவனுழைச் சிறந்த

        நிலைகெழு பொன்னு முரகசெம் மணியு

             நித்தில ராசியுங் கவர்ந்து  

        தொலைவிலாப் பண்ட மனைத்தையும் வாரிச்

             சுருட்டியே யெல்லைவிட் டகலும்

        விலைமகள் போன்றும் பலபல முகமாய்

             வெள்ளரு வித்திரள் சாயும்.

9