முதற்பாகம்
யெமக்குத் தெரியும்வண்ணம்
சொல்லுங்களென்று பயத்தோடும் நின்று கேட்டார்கள்.
652.
இந்த மாநிலத் தொருநிதி
யேயென திருவிழி மணியேகேள்
சுந்த ரப்புய னப்துல்லா
வெனதுறு துணையுயிர்க் குயிரான
மைந்த னிங்கிவன்
மனத்திருள் கெடவொரு மணமுடித் திடநாடிச்
சிந்தை நேர்ந்திவ
ணடைந்தன னுமதுரைத் திருவுள மறியேனே.
56
(இ-ள்)
அக்கதீஜாவானவர் அவ்விதம் கேட்க, இந்தப் பெருமை தங்கிய பூலோகத்திற்கு ஒப்பற்ற பொக்கிஷமானவரே!
எனது இருகண்களிலு மிருக்குமணியானவரே! கேட்பீராக; இவ்விடத்திலிருக்கப்பட்ட அழகிய தோள்களையுடைய
அப்துல்லாவாகிய எனது பொருந்திய சகோதரரின் உயிருக்குயிரான புதல்வர். இவரின் அகத்தினது அந்தகாரங்
கெடும்படி ஒருவிவாக முடித்திட விரும்பி மனமுடன்பட்டு இங்கு வந்து சேர்ந்தேன். உம்முடைய அழகிய
சிந்தையின் வார்த்தை எவ்விதமிருக்கின்றதோ? யானறியேன்.
653.
சிறிது பொன்னென திடத்தினி
லளித்திடிற் றேசிக ருடன்கூடி
யுறுதி சாமினுக் கேகியிங்
கடைகுவ னுமதரு ளுளதாகில்
வறிய வர்க்கொரு
மணநிறை வேறிடு மடமயி லனையாயீ
தறுதி யில்லெனி
லதுவுநன் றெனஅபித் தாலிபு முரைத்தாரே.
57
(இ-ள்)
இளமைபொருந்திய மயில்போன்ற கதீஜாவானவரே! கொஞ்சதிரவியம் எனதிடத்தில் தந்தால் மற்றும்
வியாபாரிகளோடு சேர்ந்து உறுதியுடைய சாம்நகரத்திற்குப் போய் இங்குவந்து சேருவோம். அதற்கு
உமது கிருபை யுண்டுமானால் எளியவராகிய இவருக்கு ஒரு விவாகமும் நிறைவேறிடும். இதுவேமுடிவு. இல்லையென்று
சொன்னால் அதுவும் நல்லது தானென்று அபீத்தாலிபவர்களுஞ் சொன்னார்கள்.
654.
நிரைத்த செவ்வரி
பரந்தகட் கடைமயி னிசமென அபித்தாலி
புரைத்த வார்த்தையுந்
தன்மனக் கருத்தையு முடன்படுத் திடநோக்கித்
திரைத்த டத்தலர்
மரையென முகமலர் செறிதரத் துயர்கூரும்
வருத்த மின்னினை
வின்படி முடிந்தென மனத்திடை களித்தாரே.
58
(இ-ள்)
வரிசையையுடைய சிவந்த இரேகைகள் பரந்த கண்களின் கடையினைப் பொருந்தியமயிலாகிய கதீஜா அவர்கள்
அவ்வாறு அபீத்தாலிபவர்கள் உண்மையென்று சொல்லிய
|