பக்கம் எண் :

சீறாப்புராணம்

259


முதற்பாகம்
 

வார்த்தைகளையுந் தங்களது மனவெண்ணத்தையும் ஒன்றுபடப் பார்த்து அலைகளையுடைய தடாகங்களின் விரியாநிற்கும் தாமரைமலர் போன்ற தங்களின் முகமானது மலர்ச்சியுறும்படி கிலேசமிகுகின்ற வருத்தம் யாதொன்றுமில்லை. நமது எண்ணத்தின்வண்ணம் நிறைவேறியதென்று மனத்தின்கண் சந்தோஷமடைந்தார்கள்.

 

655. பூத ரம்பொரு புயத்தபித் தாலிபு புளகெழ முகநோக்கி

    மாத வத்தினென் பொருளுள தெவையுநின் மனைப்பொரு ளெளியேனு

    மாத ரத்துறு மொழிவழி நடப்பதற் கையுற லெனப்போற்றிக்

    காத லித்துரைத் தார்விரைத் தார்குழற் கனிமொழிக் கதிசாவே.

59

     (இ-ள்) அவ்வாறு சந்தோஷமடைந்த வாசனைபொருந்திய புஷ்பங்களைச் சூடிய கூந்தலையும் கனிபோன்ற மொழியினையுமுடைய கதீஜா அவர்கள் மலைபோலுந் தோள்களையுடைய அபீத்தாலிபவர்களது சரீர முழுமையும் புளகமெழும்படி அவர்களின் முகத்தைப்பார்த்து பெரிய தவத்தினையுடைய எனது திரவியமனைத்தும் உங்கள் வீட்டினது திரவியம். எளியவளாகிய யானும் உங்களது அன்பினாற் பொருந்திய வார்த்தைகளின் நெறிப்படி நடப்பதற்குத் தாங்கள் சந்தேகப்பட வேண்டாமென்று துதித்து அன்புகூர்ந்து சொன்னார்கள்.
 

656. இனிய வாசக மிருதுளைச் செவிபுக விதயமென் மலர்போர்த்த

    துனிப றந்தன வுவகையும் பிறந்தன துணைவரைப் புயமீறத்

    தனிய னம்வயி னினஞ்சில பெறுபொரு டருகுவ னெனப்போற்றி

    வனச மென்மலர் முகமலர்ந் திருந்தனர் மருவல ரரியேறே.

60

     (இ-ள்) கதீஜா அவர்கள் அவ்விதங் கூறிய இனிமைதங்கிய வார்த்தைகளானவை பகைவரென்னும் யானைகட்கு ஆண்சிங்கம் போன்ற அபீத்தாலிபவர்களது இரண்டு காதுகளின் துவாரங்களிலும் நுழைய மலைபோலு மிருதோள்களும் பூரிக்கும்படித் தங்களது மனமென்னும் மெல்லிய புஷ்பத்தை மூடியிருந்த துன்பங்களனைத்தும் பறந்துவிட்டன சந்தோஷமும் பிறந்தது. ஏகனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவானவன் நம்மிடத்தில் இன்னம்பெறக் கூடிய சில திரவியங்களைத் தருகுவானென்று அவனைத் துதித்துத் தங்களின் மெல்லிய தாமரைமலர் போலும் முகமானது மலர்ச்சியுற் றிருந்தார்கள்.