பக்கம் எண் :

சீறாப்புராணம்

26


முதற்பாகம்
 

தரிக்கும் வஸ்திரங்களையும், குழலையும், குடுக்கையையும், சிறு பாயையும் எடுத்துக்கொண்டு அவர்களினது வரிசையைச் சாயச் செய்து அன்னிய மன்னவர்களைப் போலும், பெரிய செல்வத்தைக் கொள்ளையிட்டு மருத நிலத்திற் பரவியது.

 

கலிநிலைத்துறை

 

35. கன்னன் மானதி வெண்டிரை நுரைகரை புரளத்

   தென்னி லைப்பகுப் பாகிய காலெலாஞ் செருமி

   யன்ன மென்சிறைப் பெடையொடுங் குடம்பைவிட் டகலத்

   துன்னு மேரியுந் தடங்களு நிறைந்தன தோயம்.

15

      (இ-ள்) அவ்விதப் பரவிய கரும்பினது பெருமையை யுடைய அந்த ஆற்றினது வெள்ளிய அலைகளின் நுரை இரு கரைகளிலும் புரளும் வண்ணம் அழகிய நிலைமையின் பாகுபாடாகிய காலுகளெல்லாவற்றிலும் நெருங்கி அன்னப்பட்சிகளானவை தங்களின் மெல்லிய சிறகுகளையுடைய பெட்டை யன்னங்களோடுங் கூட்டைவிட்டும் நீங்கும்படி செறிந்த குளங்களும் தடங்களும் ஜலங்களும் பூரணப்பட்டன.

 

36. அலையெ றிந்திரை கடலென வருநதி யதனைத்

   தொலைவின் மள்ளர்கள் குளந்தொறும் புகுத்திய தோற்றங்

   கொலைம தக்கரிக் குழுவினை வயவராய்க் கொடுபோய்

   நிலைத ரித்திடும் படுகுழிப் படுத்தவை நிகர்க்கும்.

16

     (இ-ள்) அன்றியும், அலைகளை வீசிக்கொண்டு ஒலியாநிற்கும் சமுத்திரத்தைப் போலும் வருகின்ற அந்த ஆற்றைத் தொலைவற்ற உழவர்கள் ஒன்று சேர்ந்து குளங்கள் தோறும் புகுத்திய தோற்றமானது, கொலைத் தொழிலையும் மதத்தையுமுடைய யானைக் கூட்டத்தைப் படைவீரர்களாகக் கொண்டுபோய் நிலையணியும் படுகிடங்கில் படுத்தியவற்றை நிகர்க்கும்.

 

37. தடமு மேரியும் வாவியுங் கழனியுஞ் சலசக்

   கிடங்கு மெங்கணு நிறைதரப் பெருகுகீலாலங்

   குடம்பை யின்பல பேதமா கியசத கோடி

   யுடம்பு தோறினு முயிர்நின்ற நிலையினை யொக்கும்.

17

      (இ-ள்) அன்றியும், தடங்களும், ஏரிகளும், வாவிகளும், வயல்களும், தாமரைக் கிடங்குகளுமாகிய எவ்விடத்தும் பூரணமாகப் பெருகிய நீரானது, பல பேதமான உடலினது நூறு கோடி யளவாகிய தேகங்கள் தோறும் ஜீவனானது நின்ற நிலைமையை பொருந்தாநிற்கும்.