முதற்பாகம்
677.
நிலமிசை கலங்கி யுத்துபா வீழ
நெடுங்கழுத் தலைவரி வேங்கை
யலைபடப் பிடித்தங் கடவியி னடைய
வருக்கனுங் குடபுலத் தடைந்தான்
செலநெறி தெரியுந் தெரிகிலா தென்னத்
திசைதிசை நிறைந்தன திமிரம்
பலபல வருக்கச் சரக்கெலா மிறக்கிப்
படுபரற் பாதையி லுறைந்தார்.
81
(இ-ள்) அவ்வாறு கலக்கமடைந்து
உத்துபாவென்பவன் பூமியின்மீது விழவே வரிகள் படர்ந்த அவ்வேங்கையானது அவனேறியிருந்த ஒட்டகத்தை
வருத்தமுறும்வண்ணம் பிடித்துக் கொண்டு அவ்விடத்திலுள்ள ஒரு வனத்திற் போய் சாரச் சூரியனும் மேற்றிசையில்
போய்ச் சார்ந்தான். போவதற்குப் பாதையானது தெரியுந் தெரியாதென்று சொல்லும்படி இருளானது திக்குகளெல்லாவற்றிலும்
நிறைந்தது. அப்போது யாவர்களும் பற்பலவகுப்பாகிய சரக்குகளெல்லாவற்றையும் இறக்கிக் கொண்டு
கூர்மை பொருந்திய பரற்கற்களுடைய அப்பாதையின்கண் தங்கினார்கள்.
678.
ஆய்ந்தபே
ரறிவர் பசிக்கிடர் தவிர்த்தங்
கவரவர் சார்பினிற் சார்ந்தார்
வாய்ந்தபே ரெழிலார் முகம்மதுந் துயின்றார்
மாகமட் டெண்டிசை கவிய
வேய்ந்தவல் லிருளி லடிக்கடி வெருவி
விடுதியி னடுவுறைந் தவணிற்
சாய்ந்திடா திருகண் டூங்கிடா திருந்தான்
றருக்கினால் வெருக்கொளு மனத்தான்.
82
(இ-ள்) அவ்விதமிறங்கி
ஆராயப்பெற்ற பெரிய அறிவினையுடைய யாவர்களும், பசியினது துன்பத்தை நீக்கி அவ்விடத்திலுள்ள
அவரவர்களின் பக்கங்களிற்போய்ச் சேர்ந்தார்கள். பொருந்திய பேரழகினையுடையவர்களான நபிமுகம்மது
சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும் நித்திரை செய்தார்கள். அப்போது வேங்கையினால் அச்சத்தைக்
கொண்ட மனசை யுடையவனான அவ்வுத்துபா வென்பவன் ஆகாயத் தொடுத் தெண்டிசை மட்டும் கவியும்படி
மூடிய வலிய அந்த காரத்தில் அவ்விடத்திலுள்ள விடுதிகளின் மத்தியில் தங்கி அடிக்கடி பயமுற்று
சரிந்து படுத்திடாமலுங் கண்கள் தூங்கிடாமலும் விழித்துக் கொண்டிருந்தான்.
|