பக்கம் எண் :

சீறாப்புராணம்

275


முதற்பாகம்
 

     690. பாடுறு புனலற் றொவ்வொரு காதம்

              படுபரற் பரப்புநாற் றிசைக்கு

         மோடுவர் திரும்பி மீள்குவ ரடிச்சுட்

              டுச்சியும் வெதுப்புற வுலர்ந்து

         வாடுவர் துகில்கீழ்ப் படுத்தியொட் டகத்தின்

              வயிற்றிடை தலைநுழைத் திடுவார்

         தேடிடும் பொருட்கோ வுயிரிழப் பதற்கோ

              செறிந்திவ ணடைந்தன மென்பார்.

11

     (இ-ள்) நீரானது இல்லாமல் துன்பத்தைப் பொருந்திய ஒவ்வொரு காவதமும் கூர்மையுற்ற பரற்கற்களின் பரப்பைக் கொண்ட நான்கு திக்குகளிலும் ஓடுவார்கள். திரும்பி மீண்டு வருவார்கள். பாதங்கள் வெந்து சிரசும் சூட்டைப் பொருந்தும்படி காய்ந்து வாடுவார்கள். வஸ்திரங்களைக் கீழே வைத்து அதன்மீது ஏறி நின்றுக்கொண்டு தலைகளை ஒட்டகத்தின் வயிற்றினது பக்கத்தில் புகுத்திவிடுவார்கள். நாம் சம்பாதித்திடுந் திரவியத்திற்காகவோ? அல்லது ஜீவனை இழந்து விடுவதற்காகவோ கூட்டமுற்று இவ்விடத்தில் வந்து சேர்ந்தோமென்று சொல்லுவார்கள்.

 

     691. ஓங்கிய வுதய கிரிமிசை யெழுந்த

              மதியென வொட்டகை யதன்மேல்

         வீங்கிய புயமுங் கரத்தினி லயிலும்

              வெண்முறு வலுமலர் முகமும்

         பாங்கினிற் குளிர்ந்த வெண்கதிர் பரப்பப்

              பரிமள மான்மதங் கமழத்

         தூங்கிசை மறைதேர் முகம்மதும் பாலைத்

              துன்புறா தின்பமுற் றனரே.

12

     (இ-ள்) அப்போது தூங்கிய இசைகளையுடைய வேதங்களனைத்தையுந் தெளிந்த நபிமஹ்மூது முகம்மது சல்லல்லாலகு அலைகிவசல்லமவர்களும் வளர்ச்சி தங்கிய உதய பருவதத்தின் மேல் எழும்பிய சந்திரனைப் போல ஒட்டகத்தின் மீது பருத்த தோள்களும் வேலாயுதமும் வெண்ணிறத்தையுடைய பற்களும் தாமரைமலர் போன்ற முகமும் பக்கங்களிற் குளிர்ச்சி பொருந்திய வெள்ளிய கிரணங்களைப் பரப்பவும், தேகத்தின் கண்ணுள்ள கஸ்தூரிவாசனை கமழவும் இருந்து அந்தப் பாலை நிலத்தைத் துன்பமுறாது இன்பமுற்றார்கள்.