முதற்பாகம்
(இ-ள்)
அப்பொழுது சூரியனானவன் படர்ந்த அலைகளென்னும் வயிறானதை அலைக்கப் பெற்ற பசிய ஜலத்தையுடைய
சமுத்திரத்தின்கண் மூழ்கித் தனது செந்நிறத்தையுடைய
கிரணங்களென்னுங் கைகளினால் சேர்ந்த இருளினது கூட்டத்தை அறச்செய்து அழித்துப் பெருமைதங்கிய
உதயபருவத்தின்கண் விளக்கமாயினான்.
733. அரிசினக்
கொடுவரி யமிழ்ந்து போதரப்
பொரியரைத்
தருக்களைப் புரட்டிப் பொங்கிய
நுரையிரு
கரைகளு நுங்க மானதிப்
பிரளய
மிடனறப் பெருகி வந்ததே.
11
(இ-ள்)
அவ்வாறு விளக்கமாகவே கோபத்தையுடைய சிங்கங்களும் வேங்கைகளும் சலத்தினகந் தாழ்ந்து போகப்
பொரி தங்கிய அரையினை யுடைய விருட்சங்களைப் புரளச்செய்து பொலிந்த நுரைகள் இரு கரைகளையும்
விழுங்கும்படி விசாலமாகப் பெருமையையுடைய அவ்வாற்றினது பெருக்கானது எவ்விடமும் பெருகி வந்தது.
734. குறவரைக்
குறிஞ்சிவிட் டீழ்த்துப் பாலையின்
மறவரை
முல்லையி லாக்கி மாசுடைத்
தொறுவரை
நிரையொடுஞ் சுருட்டி வாரியே
யறைபுனற்
பெருக்கெடுத் தடர்ந்த தெங்குமே.
12
(இ-ள்)
அன்றியும், குறிஞ்சி நிலத்தின் கண்ணுள்ள வேடரை அந்நிலத்தைவிட்டு மிழுத்துப்
பாலைநிலத்திலாக்கிவிட்டு அந்நிலத்திலுள்ள மறவரை இழுத்து முல்லை நிலத்திலாக்கி அங்குள்ள
கரியநிறத்தையுடைய இடையவரை வரிசையுடன் சுருட்டி வாரிக்கொண்டு ஒலிக்காநின்ற ஜலமானது
எவ்விடமும் பெருக்கெடுத்து அடர்ந்தது.
735. கரைசுழித்
தெறிந்துநீள் கயங்க ளாக்கின
திரையெறி
கயத்தினைத் திடர தாக்கின
விரைகமழ்
சோலைவே ரறுத்து வீழ்த்தின
வரைகளைப்
பிடுங்கின மலிந்த நீத்தமே.
13
(இ-ள்)
அன்றியும், அவ்வாறு பெருகிய ஜலமானது இரண்டு கரைகளையுஞ் சுழியச்செய்து நீண்ட குளங்களாக்கினது.
அலைகளை எறியாநிற்குங் குளத்தினை மேடுகளாக்கினது. வாசனை பரிமளிக்கின்ற சோலைகளை
வேர்களுடன் அறும்படி செய்து பூமியின்கண் வீழ்த்தினது. அங்கு சூழ்ந்திருந்த
மலைகளெல்லாவற்றையும் அடியோடும் பிடுங்கினது.
|