பக்கம் எண் :

சீறாப்புராணம்

294


முதற்பாகம்
 

வெள்ளிய அலைகளையுடைய சமுத்திரத்தினது வயிற்றை நிரப்பும் வண்ணம் மோதிய ஜலத்தினைக் கொண்ட அவ்வாற்றின் கரையின்கண் போய் முன்னினார்கள்.

 

     746. அள்ளிய பொன்னெடுத் தமைத்து வெள்ளியாற்

        புள்ளிக ளணியணி பொறித்து வைத்தன

        வொள்ளிய வெய்யழ கொழுக வொல்லையிற்

        றுள்ளிய வுழையுழை யிடத்திற் றோன்றிற்றே.

24

     (இ-ள்) அப்பொழுது அள்ளிய சொர்னத்தை எடுத்துண்டாக்கி அதன்மேல் வரிசை வரிசையாக வெள்ளியினால் புள்ளிகள் எழுதியதை யொப்ப அவர்களின் மருங்கினிடத்தில் பிரகாசத்தையுடைய சரீரத்தின் கண்ணுள்ள அழகானது ஒழுகிடும்படி துள்ளாநிற்கும் ஒரு மானானது சீக்கிரத்தில் வந்து தோற்றினது.

 

     747. நதியிடை வந்துமா னடப்பக் கண்டுமா

        மதிநிகர் முகம்மது மனத்தி லின்பமுற்

        றிதமுற நடந்துபி னேக யாவரும்

        புதுமைகொ லிதுவெனத் தொடர்ந்து போயினார்.

25

     (இ-ள்) அவ்வாறு அம்மானானது வந்து ஆற்றின்கண் முன்னால் நடந்து போகவும், அதை மேன்மை பொருந்திய சந்திரனுக் கொப்பான நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் தங்களது கண்களாற் பார்த்து மனத்தின்கண் மகிழ்ச்சி கொண்டு இனிமை பொருந்தும்படி அம்மானின் பின்னால் நடந்து போகவும், அங்குற்ற அனைவர்களும் இஃது அதிசயமென்று சொல்லி அந்நபிகணாயகமவர்களைப் பின்பற்றிப் போயினார்கள்.

 

     748. உடற்பொறிப் புள்ளிக ளொளிர முன்செலு

        மடப்பிணை பின்செலு மக்க ளியாவர்க்குங்

        கடற்பெருக் கெனக்கரை கடந்து வீங்கிய

        தடப்பெரு நதிமுழந் தாட்கு ளானதே.

26

     (இ-ள்) அவ்வாறு சரீரத்தின்கண் பொறிக்கப்பட்ட புள்ளிகளானவைப் பிரகாசிக்கும்படி முன்னால் நடந்து செல்லும் இளம்பருவத்தையுடைய அம்மானினது பின்னால் நடந்து போகும் அவ்வியாபாரிகள் யாவர்களுக்கும் சமுத்திரத்தினது பெருக்கையொப்ப இருகரைகளையுந் தாண்டி மிகுந்த விசாலமாகிய அந்தப் பெரிய ஆறானது முழங்கால்களுக்கு அகமாயிருந்தது.