பக்கம் எண் :

சீறாப்புராணம்

295


முதற்பாகம்
 

     749. பெருகிய பிரளயப் பெருக்கைப் போக்குதற்

        கொருவனே யலதுவே றிலையென் றுன்னியே

        தெருளுறச் செல்குநர் செல்க வென்றனர்

        வரையிரண் டெனுமணிப் புயமு கம்மதே.

27

     (இ-ள்)  அப்போது இரண்டு மலைகளென்று சொல்லும் படியான அழகிய தோள்களையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் அதிகரித்த ஜலத்தினது பிரவாகத்தைப் போக்குவதற்கு ஏகனாகிய ஜல்லஜலாலகுவத்த ஆலாவானவனே யல்லாமல் வேறேயொருவனு மில்லையென்று உங்களது மனசின்கண் நினைத்து அறிவு பொருந்தும்படி நடக்கப்பட்ட நீங்கள் நடந்து சொல்லுங்களென்று சொன்னார்கள்.

 

     750. இம்மொழி நன்கென விசைந்தி யாவருஞ்

        செம்மலோ டினிதுறச் செல்லுங் காலையில்

        விம்மிதப் புயநபி விரித்த வாசகஞ்

        சம்மதித் திலனொரு தறுக ணாளனே.

28

     (இ-ள்) அவர்கள் அவ்வாறு சொல்லவே அங்குற்ற அனைவர்களும் இந்த வார்த்தைகள் யாவும் நல்லவையென்று பொருந்திச் செம்மலாகிய அந்நபிகள் பெருமா னவர்களோடும் இனிமையுறும்படி நடக்கின்ற சமயத்தில் விம்மிதத்தைக் கொண்ட தோள்களையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் விரிவாக எடுத்துச் சொல்லிய அந்த வார்த்தைகளை ஒரு தறுகண்ணனானவன் தனது மனசின்கண் பொருந்தினா னில்லன்.

 

     751. புந்தியிற் புத்தினைப் புகழ்ந்து போற்றித்தன்

        சிந்தைவைத் தவ்வுழைச் செல்லும் போழ்தினி

        லுந்தியின் றிரைசுழித் துருட்டி யீழ்த்திட

        நந்தினா னபியுரை மறுத்த நாவினான்.

29

     (இ-ள்) அவ்விதம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் சொன்ன வார்த்தைகளுக் கிணங்காது மறுத்த நாவினையுடைய அம்மனிதன் தனது புத்தியினால் விக்கரகத்தைத் துதித்து வணங்கி அவ்விக்கிரகத்தின் மீது தனது மனசைநாட்டி அவ்வாற்றினிடத்தில் நடந்து போகின்ற சமயத்தில் ஆற்றினது சுழிகளையுடைய அலையானது அவனைச் சுழித்துப் புரட்டியிழுத்திடத் தனது சரீரம் கெட்டுப் போகும்படி மாண்டனன்.

 

     752. விதியவன் றூதர்சொன் மேவி லாதவ

        னதியினி லிறந்தன னடுக்க மின்றியே

        யிதமுற வுண்மைகொண் டிசைந்த பேர்முழுக்

        கதிபெறு பவரெனக் கரையி லேறினார்.

30