முதற்பாகம்
760.
என்ற வாசகஞ்
செவிபுக வெழிலிரு புயமுங்
குன்று போலுற
வீங்கின முறுவல்கொண் டிடராய்
நின்ற வேங்கையெவ்
வுழியென நிகழ்த்தின ரவனும்
வென்றி வாளர
சேயணித் தெனவிளம் பினனே.
7
(இ-ள்)
என்று சொல்லிய வார்த்தைகளனைத்தும் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களின் காதுகளில்
நுழையவே, அழகிய இருதோள்களும் மலைகளைப் போலப் பொருந்தும்படி பருத்தன. அன்றியும்,
புன்சிரிப்புக் கொண்டு அவ்வாறு கூறிய அம்மனிதனைப் பார்த்து இடைஞ்சலாக நின்ற அப்புலியானது
இருக்குமிடம் எவ்விடமென்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதனும் வெற்றியையுடைய வாட்படை
தாங்கிய வேந்தரே! சமீபத்தில்தா னிருக்கின்றதென்று சொன்னான்.
761.
இலங்கு செங்கதிர்
வேலொரு கரத்தினி லேந்தி
நிலங்கொ ளப்பரந்
தரியமெய் யொளிபுடை நிலவ
நலங்கொள்
குங்குமத் தொடைபுரண் டசைந்திட நடந்தா
குலங்கொ
டோண்முகம் மதுபுலி யுறைநெறி யுழையில்.
8
(இ-ள்)
அப்போது திரளைக்கற்கள் போலுந் தோட்களைப் பெற்ற நபிமுகம்மது சல்லல்லாகு
அலைகிவசல்லமவர்கள் ஒருகையில் பிரகாசியா நிற்கும் சிவந்த கிரணங்களையுடைய வேற்படையைத்
தாங்கிக் கொண்டு அரிதான தங்களது சரீரத்தின்கண் ணிருந்துண்டாகும் பிரபையானது பூமியிற்
பொருந்தும்படி பரவிப்பக்கங்களில் நிலவச் செய்யவும், அழகிய குங்குமப் புஷ்பத்தினாலாகிய
மாலையானது தோள்களிற் கிடந்து புரண்டு அசைந்திடவும், நடந்து அப்புலியானது தங்கும் பாதையின்
மருங்கினில் போயினார்கள்.
762.
மாதி ரத்துறை
கேசரி நிகர்முகம் மதுதம்
பூத ரப்புய மசைதரப்
புளகிதத் தோடுங்
காது செங்கதிர்
வேல்வலக் கரத்திடை கவின
வீதி வாய்வரக்
கண்டது பெருவரி வேங்கை.
9
(இ-ள்)
அவ்விதம் அவர்கள் போகவே பெரிய இரேகைகள் படர்ந்த அப்புலியானது மலைகளில்
வாசஞ்செய்யாநிற்கும் சிங்கத்திற் கொப்பாகிய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள்
தங்களது மலைபோன்ற தோள்கள் அசையும்படி மகிழ்ச்சியுடன் கொலை செய்யாநின்ற சிவந்த
பிரகாசத்தையுடைய வேற்படையானது வலது கையின் கண்ணிருந்து அழகைச் செய்யும் வண்ணம்
பாதையினிடமாய், நடந்து தனது முன்னால் வருவதைப் பார்த்தது.
|