முதற்பாகம்
763.
கண்ட போதினில்
வால்குழைத் தரியமெய் கலங்கிக்
கொண்டு மென்மெல
நடந்துதன் பெருஞ்சிரங் குனித்துத்
தண்ட ளிர்ப்பதத்
தெரிசனைக் கெனச்சலா முரைத்துத்
தெண்ட னிட்டது
வள்ளுகிர் திண்டிறற் புலியே.
10
(இ-ள்)
அவ்வாறு நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் வருவதைப் பார்த்த சமயத்தில்
கூர்மைபொருந்திய நகத்தினையும் திண்ணிய வலிமையினையு முடைய அப்புலியானது தனது வாலை வளைத்துப்
பெரிய தலையைத் தாழ்த்தி அரிய சரீரமானது நடுக்கமுற்றுக் கொண்டு பையப்பைய நடந்து எதிராக
வந்து குளிர்ச்சி தங்கிய தளிர்போலும் உங்களது பாதத் தெரிசனைக்கென்று சலாஞ் சொல்லி
வணங்கிற்று.
764.
நலன்பெ றுங்குறை
சிகளினில் வந்த நாயகமே
நிலம்ப ரந்துதீன்
பெருகிட வெழுந்தநீ ணிலவே
புலன்க ளின்புறக்
கண்டனன் களித்தனன் பொருவில்
பலன்பெ றும்படி
யாயின னெனப்பகர்ந் ததுவே.
11
(இ-ள்)
அன்றியும், நன்மை பெறாநிற்கும் குறைஷிகளினது வீட்டின்கண் ணுதித்துவந்த நாயகமானவர்களே!
தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கமானது இப்பூலோக முழுவதும் பரவிப் பெருகிடும்படியாக எழும்பிய
நீண்ட நிலாவானவர்களே! யானின்று தங்களை எனது கருத்தும் கண்களும் இனிமையுறும் வண்ணம்
பார்த்தேன். அதனால் சந்தோஷத்தை யடைந்தேன். ஒப்பில்லாத புண்ணியத்தையும் பெறும்படியாகி
விட்டேனென்றுத் தனது வாயைத் திறந்து சொல்லிற்று.
765.
வந்து தெண்டனிட்
டெழுந்துவாய் புதைத்துற வணங்கிப்
புந்தி கூர்தரப்
போற்றிய வள்ளுகிர்ப் புலியை
மந்த ராசல முகம்மது
நனிமன மகிழ்ந்து
சந்த மென்மணிக்
கரத்தினாற் சிரமுகந் தடவி.
12
(இ-ள்)
அவ்வாறு தங்களது முன்னால்வந்து தெண்டனிட்டு வாய்பொத்தி மிகத்தாழ்ந்து புத்தியானது
அதிகரிக்கும்படி துதித்த கூர்மைதங்கிய நகத்தினையுடைய அப்புலியை மந்தரகிரிக்கொப்பாகிய
நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் மிகுந்த மனக்களிப்படைந்து தங்களின் அழகிய
நன்மையையுடைய மெல்லிய கைகளினால் தலையையும் முகத்தையும் தடவி.
766.
இன்று தொட்டிவ
ணெறியினி லுயிர்செகுத் திடுவ
தன்று வேறொரு
காட்டினிற் புகுகவென் றறைந்த
மன்ற றுன்றிய
முகம்மதின் மலரடி வணங்கி
நன்று நன்றெனப்
போற்றியே நடந்தது வேங்கை.
13
|