முதற்பாகம்
(இ-ள்)
அன்றியும், அவர்கள் அங்குற்ற குளிர்ச்சி தங்கிய ஜலத்தின்கண் ஸ்நானஞ் செய்வார்கள்.
அவ்விதம் ஸ்நானஞ் செய்து செழுமையான அச்சோலையின் கண்ணுள்ள புஷ்பங்களைப் பறிப்பார்கள்.
குற்றமற்ற பழங்களைப் புசிப்பார்கள். வளமை பொருந்திய தளிர்களைப் பறித்து மிருகங்களுக்குக்
கொடுப்பார்கள். பூக்களினால் படுக்கைக்குரிய மெத்தை முதலியவைகளைச் செய்வார்கள்.
மலர்களைக் கோத்து சரீரத்தின்கண் தரித்துக் கொள்ளுவார்கள். இஃதெல்லாம்
பெரியதவத்தையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகி வசல்லமவர்கள் இவ்விடத்தில் வரப்பெற்ற
பிரயோசமென்று வாயைத் திறந்து பேசிக் கொள்ளுவார்கள்.
806.
கனிபல வருந்தித்
துண்டக் கரும்படு சாறு தேக்கிக்
குனி தலை யிளநீ
ருண்டு கொழுமடற் றேனை மாந்தி
நனிவயி
றார்ந்தோம் பொய்யா நாவினன் மனையிற் புக்கி
யினியெவர்
விருந்துண் பாரென் றெழின்முக மலர்ந்து சொல்வார்.
21
(இ-ள்)
அன்றியும், அவர்கள் பலவிதமான பழவர்க்கங்களைப் புசித்துக் கரும்பினது துண்டங்களைக் காச்சிய
சாற்றினைத் தேக்கிக் குனிந்த சிரத்தினையுடைய தென்னமரங்களின் இளநீர்களைக் குடித்துச்
செழிய மடலினது தேனையருந்தி மிகவயிறு நிறைந்தோம். ஆகையால் இனிமேல் பொய்யாத
நாவினையுடையவனான அவ்விசுறா வென்னும் பண்டிதனது வீட்டின்கண் புகுந்து யாவர்
விருந்தருந்துவார்களென்று தங்களது அழகிய முகமானது மலரப் பெற்றுப் பேசிக் கொள்வார்கள்.
807.
இன்னண மியம்பிக்
காவி லினிதுறைந் திருக்குங் காலைச்
சென்னெறி வேத
நன்னூ றெளிந்தறி யிசுறா வென்போன்
றன்மனை விருந்துண்
டேக வருகவென் றிருவர் சார்ந்திம்
மன்னவர் தம்மைப்
போற்றி மனங்களி குளிர்ப்பச் சொன்னார்.
22
(இ-ள்)
இந்தப்படியாக ஒருவர்க்கொருவர் பேசிக் கொண்டு அந்தச் சோலையின்கண் இனிமையோடுந்
தங்கியிருக்கும் சமயத்தில் அவ்விடத்திலிருவர்கள் வந்து எவ்விடத்தும் செல்லாநிற்கும்
சன்மார்க்கத்தினை யுடைய வேதங்களையும் நன்மை பொருந்திய சாஸ்திரங்களையுந்
தேர்ச்சியுற்றறிந்த இசுறாவென்று சொல்லும் பண்டிதனது வீட்டில் விருந்தருந்திப் போக
வாருங்களென்று இவ்வசர்களான வியாபாரிகளைத் துதித்து இவர்களின் உள்ளமானது சந்தோஷத்தினாற்
குளிர்ச்சி அடையும்படி சொன்னார்கள்.
|