பக்கம் எண் :

சீறாப்புராணம்

318


முதற்பாகம்
 

 

யாவர்களும் போற்றா நிற்கும் சாஸ்திரத்தின் வித்தாண்மையுள்ள பண்டிதனான அவ்விசுறா வென்பவனின் செவியினது மடற்றுவாரத்தில் ஓடிச்சென்று மனசின்கண் எரிந்திடவே, அவன் புழுக்கமுற்றுக் கொதித்து வாயிலுள்ள உமிழ்நீரானதும் உலரப் பெற்றுக் கண்களில் வளராநின்ற அக்கினியின் சுவாலையைக் காட்டிக் காய்ந்த கோபத்தை யுடைய ஆண்சிங்கத்தை நிகர்த்தவனாயினான்.

 

814. சினத்தினை யடக்கித் தேறாச் சிந்தையைத் தேற்றி நந்த

    வனத்தினி லிருந்த செவ்வி முகம்மதைக் கொணர்க வென்ன

    நினைத்தவ னுரைப்பக் கேட்டங் காரிது நெடிதிற் புக்கிக்

    கனைத்துவண் டிருந்த தண்டார் கபீபுதம் மிடத்திற் சார்ந்தான்.

29

     (இ-ள்) அவ்விசுறா வென்னும் பண்டிதன் அவ்வாறு உண்டாகிய கோபத்தை ஒடுக்கித் தெளியாத மனதைத் தெளியும்படி செய்து ஆலோசித்து நமது சோலையின்கண் ணிருக்கப் பெற்ற அழகிய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைக் கூட்டிக்கொண்டு வாருங்களென்று சொல்ல, அதை ஆரிதென்பவன் கேள்வியுற்று நெடிதாக அச்சோலையின்கண் புகுந்து வண்டுகளானவை ஒலித்துத் தங்காநிற்கும் குளிர்ச்சி பொருந்திய மலர்மாலை யணிந்த புயங்களை யுடைய ஹபீபென்னுங் காரணப் பெயர்பெற்ற நபிகணாயக மவர்களிடத்திற் போய்ச் சேர்ந்தான்.

 

815. மங்குலங் கவிகை யீர்நம் வரவினைக் காணான் சீற்றச்

    செங்கதிர் தெறிக்கக் கண்கள் சிவந்தனன் சினந்த வேகம்

    பொங்குமா தவத்தோன் கோபப் புரையற வேண்டு மல்லா

    லெங்களைக் காக்க வேண்டும் படியெழுந் தருள்கவென்றான்.

30

     (இ-ள்) அவ்விதம் போய்ச்சேர்ந்த ஆரிதென்பவன் அழகிய மேகக்குடையை உடைய நபிகள் பெருமானே! நமது வருகையைக் கண்களினாற் காணாது சீற்றமுற்றவனாய் சிவந்த கிரணங்கள் தெறிக்கும்படி இரண்டு கண்களும் சிவப்பை யடைந்து சினந்த வேகமானது அதிகரிக்கும் மகாதவத்தைப் பெற்ற அவ்விசுறா வென்னும் பண்டிதனது கோபமாகிய குற்றமற வேண்டியது மல்லாமல் எங்களனைவரையும் இரட்சிக்கும்படி அப்பண்டிதனது வீட்டின்கண் எழுந்தருளுங்க ளென்று சொன்னான்.

 

816. சிலைவய வரியா ரீது செப்பிய மாற்றங் கேட்டு

    மலையெனும் புயங்க ளோங்க மகிழ்ந்துபுன் முறுவல் கொண்டு

    கலைவல னிசுறா வென்னுங் காவலன் களிப்பச் சேந்த

    விலைமலி கதிர்வே லேந்தி முகம்மது மெழுந்தா ரன்றே.

31