பக்கம் எண் :

சீறாப்புராணம்

319


முதற்பாகம்
 

     (இ-ள்) அப்போது மலையின்கண் வாசஞ்செய்யாநிற்கும் வேங்கைக்கொப்பாகிய ஆரிதென்பவன் அவ்வாறு சொல்லிய வார்த்தைகளை நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் தங்களது காதுகளினாற் கேள்வியுற்று மலையென்று சொல்லும் இரு தோள்களும் வளர்ச்சியுறும்படி சந்தோஷமடைந்துப் புன்சிரிப்புக்கொண்டு சாஸ்திரங்களில் வல்லமையுள்ளவனாகிய இசுறாவென்னும் மன்னவன் மகிழ்ச்சியெறும் வண்ணம் இலைகள் மிகுத்த சிவந்த பிரகாசத்தையுடைய வேற்படையை வலது கையிற் றாங்கிக் கொண்டு எழும்பினார்கள்.

 

817. சலதரந் திரண்டு நீங்காத் தனிக்குடை நிழற்றச் சோதிக்

    கலைமதி பொருவா மெய்யிற் கதிர்புடை விலகி மின்ன

    நிலமிசை வழிக்குக் காத மான்மத நிறைந்து வீச

    மலரடி படிதீண் டாது மாதவன் மனையிற் புக்கார்.

32

     (இ-ள்) அவ்வாறு எழும்பிய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் மேகங்களனைத்து மொன்றாய்க்கூடி மாறாத ஒப்பற்ற குடையினது நிழலைச் செய்யவும், பிரகாசத்தையுடைய சோடச கலைகள் நிறைந்த சந்திரனு மொப்பாகாத தங்களது சரீரத்தின் கண்ணுள்ள பிரகாசமானது பக்கங்களில் விலகி ஒளியைச் செய்யவும், பூமியின் மீது காதவழி தூரத்திற்குக் கஸ்தூரி வாசனைபெருகிப் பரிமளிக்கவும் தாமரைப் புஷ்பம்போலும் இருபாதங்களும் தரையைத் தொடாது நடந்து மகா தவத்தை யுடையவனான அவ்விசுறாவென்னும் பண்டிதனது வீட்டின்கண் போய்ச் சேர்ந்தார்கள்.

 

818. தொட்டபாழ்ங் கிணறுண் டாங்கு துவலைநீ ரசும்புந் தோன்றா

    திட்டமுள் ளிலையீந் தங்ங னிருந்திறந் தனேக காலக்

    கட்டையொன் றுளது தன்பாற் கபீபுமெய் கவின்க னிந்து

    விட்டொளி பரப்பத் தோன்றி விரைவின்வீற் றிருந்தாரன்றே.

33

     (இ-ள்) அவ்விதம் சேரவே அவ்விடத்தில் தோண்டிய பாழான ஒரு கிணறுண்டு. அதில் ஒரு துளி ஜலமாவது அல்லது வழக்குநிலமாவது பார்வைக்குத் தெரியாது. அதன் பக்கத்தில் வைத்த முட்களைக் கொண்ட இலைகளையுடைய வீத்த மரமொன்றிருந்து கரிந்து போன அனேக காலத்தையுடைய ஒரு கட்டையுண்டு. அதன் பக்கத்தில் ஹபீபென்னுங் காரணப் பெயர் பெற்ற நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் சீக்கிரத்தில் தங்களது சரீரத்தின் கண்ணுள்ள அழகானது பழுத்துப் பிரபைவிட்டு நானாபக்கங்களிலும் பரப்பும்படி உதயமாகி வீறுடனிருந்தார்கள்.