பக்கம் எண் :

சீறாப்புராணம்

320


முதற்பாகம்
 

819. குறைபடுங் கூவல் கீழ்பாற் குமிழிவிட் டெழுந்து மேல்பா

    னிறைபடப் பொங்கி யோங்கி நிலம்வலஞ் சுழித்திட் டேறி

    யிறையவன் றூதர் செவ்வி யிணைமலர்ப் பதத்திற் றாழ்ந்து

    துறைதொறும் பெருகும் வெள்ள நதியெனத் தோற்றிற் றன்றே.

34

     (இ-ள்) அப்போது ஜலமில்லாது குறைவைப் பொருந்திய அந்தக் கிணறானது அடிப்பக்கத்திலிருந்து நீர்க்குமிழிகளை விட்டு எழும்பி மேற்பக்கத்தில் நிறையும்படி பொலிந்து வளர்ந்து பூமியின்கண் வலப்பக்கத்தில் வட்டமிட்டுயர்ந்து இறையவனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் றசூலாகிய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களின் அழகிய தாமரைப் பூப்போலும் இரு பாதங்களிலும் வணங்கித் துறைகள் தோறும் பெருகாநிற்கும் தீர்த்தத்தையுடைய ஆற்றைப்போல விளங்கினது.

 

820. இருந்தது தொல்லை நாளி லிறந்தபே ரீந்தின் குற்றி

    கரிந்திடம் பசந்து செவ்வே கதித்தெழக் குருத்து விட்டுச்

    சொரிந்தநெட் டிலைவிட் டோங்கித் துடர்துணர் தோறும் பாளை

    விரிந்துபூச் சிந்திக் காய்த்து மென்கனி சிதறிற் றன்றே.

35

      (இ-ள்) அன்றியும், பழைய காலத்திற் பட்டுப்போன அந்தப் பெரிய வீத்தமரத்தின் குற்றியானது தீய்ந்து இருந்த இடமுழுவதும் பச்சைநிறமாய்ச் செவ்வையாக அதிகரித்து எழும்பும்படி குருத்துகளை விட்டுச் சொரியப் பெற்ற நெடிய இலைகளை விண்டு வளர்ந்துத் தொடர்பையுடைய துணர்கள் தோறும் பாளைகள் மலர்ந்து புஷ்பங்களைச் சிதறிக் காய்த்து மெல்லிய பழங்களைப் பொழிந்தது.

 

821. கோதறப் புனலுண் டாகிக் குற்றியுந் தளிர்ப்பக் கண்ட

    மாதவன் மனமுங் கண்ணு மகிழ்வொடு களிப்புப் பொங்கிச்

    சீதரக் கவிகை வள்ளன் முகம்மதின் சேந்த செவ்வி

    பாததா மரையிற் றாழ்ந்து பைந்துணர் மௌலி சேர்த்தான்.

36

     (இ-ள்) அப்போது அப்பாழ்ங் கிணற்றின்கண் குற்றமற ஜலமுண்டாகி கரிந்துகிடந்த அந்தவீந்தின் குற்றியுந் துளிர்க்கும்படி பார்த்த மகாதவத்தையுடையவனான அவ்விசுறாவென்னும் பண்டிதன் தனது கண்களும் இருதயமும் இனிமையுடன் சந்தோஷம் மிகுக்கப்பெற்று மேகக்குடையையுடைய வள்ளலான நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் அழகிய சிவந்த சரணாம்புயத்திற்பணிந்து பசுமைதங்கிய புஷ்பங்களைச் சூடிய கிரீடத்தைப் பொருந்தினான்.