பக்கம் எண் :

சீறாப்புராணம்

332


முதற்பாகம்
 

விசாலித்த மேகக் குடையினது நிழலின்கண் மலைபோலும் இருபுயங்களும் பிரகாசிக்கும்படி நடந்து போயினார்கள்.

 

856. சிந்து நன்மணிக் கதிரெழத் திரைக்கரத் தெறிந்து

    வந்த மாநதிக் கணியெனு மொருகரை மருங்கிற்

    கந்த மென்மலர் செறிதருங் காவகங் கடந்து

    புந்தி கூர்தர மக்கிக ளனைவரும் போனார்.

13

     (இ-ள்) மக்கமாநகரத்தை யுடையவர்களாகிய அவ்வியாபாரிகளெல்லாரும் அறிவானது மிகுக்கும் வண்ணம் சொரியா நிற்கும் நல்ல இரத்தின வருக்கங்களினது பிரகாசமானது ஓங்கும்படி அலைகளென்னுங் கைகளினால் எடுத்து வீசிக் கொண்டு வந்த பெரிய அந்த ஆற்றிற்கு ஆபரணமென்று சொல்லும் ஒரு கரையினது பக்கத்தில் வாசனை பொருந்திய மெல்லிய புஷ்பங்கள் நெருங்கா நின்ற சோலைகளினது இடங்களைத் தாண்டிப் போயினார்கள்.

 

854. சீத வொண்புனற் செழுமல ரோடையிற் செறிந்த

    கோதில் வெண்சிறைப் பெடையொடுங் குருகின மிரியப்

    பாதை போந்தனர் சாமெனுந் திருப்பெயர்ப் பதிக்கோர்

    காத மாமென விறங்கினர் கடிமலர்க் காவில்.

14

     (இ-ள்) அவ்வாறு போயின யாவர்களும் குளிர்ச்சி பொருந்திய ஒள்ளிய சலத்தினையும் செழுமையான புஷ்பங்களையுமுடைய அங்குள்ள தடாகத்திற் பொருந்திய குற்றமற்ற வெண்மையான சிறகுகளைக் கொண்ட பெட்டையன்னக் கூட்டங்களோடும் ஆணன்னக் கூட்டங்கள் ஓடும்படி வழி நடந்து சாமென்னு மபிதானத்தை யுடைய அழகிய நகரத்திற்கு ஒரு காதவழி தூரமென்று சொல்லும்படியாயுள்ள வாசனை பொருந்திய புஷ்பங்களையுடைய ஒரு சோலையின்கண் போயிறங்கினார்கள்.

 

855. ஒட்ட கத்திர ளனைத்தையு மொழுங்குற நிரைத்துக்

    கட்டி வாம்பரித் திரளையுஞ் சேர்த்தனர் கடிதின்

    விட்ட பாசறை யிடங்களி னிவைவியப் பெனவே

    செட்டர் சூழ்தர விருந்தனர் செழுமலர்க் காவில்.

15

     (இ-ள்) அவ்வாறு இறங்கிய அவ்வியாபாரிகள் யாவரும் விரைவாய் ஒட்டகக் கூட்டங்களனைத்தையும் ஒழுங்காகக் கட்டித் தாவா நிற்கும் குதிரைக் கூட்டங்களையும் வரிசையாக்கி அதனோடு சேர்த்து நாம் இதுவரையும் கூடாரங்களிட்டு நீக்கிய இடங்களெல்லாவற்றிலும் இவ்விடம் ஆச்சரியமானதென்று சொல்லிச் செழுமையான புஷ்பங்களையுடைய அச்சோலையின் கண் சூழும்படி இருந்தார்கள்.