முதற்பாகம்
சாமு நகர் புக்க படலம்
கலிநிலைத்துறை
857.
காவ கத்திலன்
றிருந்திருள் கடிந்துவெங் கதிரோன்
மேவு வெண்டிரைக்
கடன்முகட் டெழுதலு மேலோர்
தாவு வெம்பரி யொட்டகைத்
திரளொடுஞ் சாய்த்தே
யேவி லங்கையி லேந்திய
வேந்தலோ டெழுந்தார்.
1
(இ-ள்)
மேன்மை யுடையவர்களான அவ்வியாபாரிக ளனைவர்களும் அன்று முழுவதும் அந்தச் சோலையின்கண் தங்கியிருந்து
அந்தகாரத்தை யழித்து வெவ்விய கிரணங்களையுடைய சூரியனானவன் பொருந்திய வெள்ளிய அலைகளையுற்ற
சமுத்திரத்தினது உச்சியில் எழுந்த மாத்திரத்தில் தாவிச் சாடா நிற்கும் கொடிய குதிரைகளை
யொட்டகக் கூட்டங்களுடன் சாய்த்துக் கொண்டு உள்ளங்கையின்கண் அம்பையும் வில்லையும் தாங்கிய
அரசரான நபிமுகம்மது சல்ல்லாலகு அலைகிவசல்ல மவர்களோடு மெழுந்தார்கள்.
858.
கடிகொண் மென்மலர்த்
துடவையுங் கருஞ்சுரும் புதைப்ப
வடியுந் தேன்மலர்
வாவியும் வளர்கழைக் குலம்போ
னெடிய பச்சிலைக்
கரும்புடைக் கழனியு நிறைந்த
கொடியி லைச்சிறு கேணியுங்
குறுகிட நடந்தார்.
2
(இ-ள்) அவ்விதமெழும்பி
யாவர்களும் வாசனை கொண்ட மெல்லிய புஷ்பங்களையுடைய சோலைகளையும், கரிய நிறத்தைப் பெற்ற
வண்டுகள் தங்களது காற்களினாலுதைக்க, அதனால் வழியா நிற்குந் தேனைப்பொருந்திய மலர்களையுடைய
தடாகங்களையும் ஓங்குகின்ற மூங்கிற் கூட்டம் போலும் நீண்ட பசிய இலைகளையுற்ற கரும்புகளையுடைய
வயல்களையும் பெருகிய வெற்றிலைக் கொடியையுடைய சிறிய அகழிகளையும் அடுத்து நடந்து
போயினார்கள்.
859.
கூய்த்தி ரண்டளி
யினங்குடைந் துழிநறாக் குளித்துத்
தோய்த்த பொற்குவ
டெனவிரு வரைப்புயந் துலங்க
வாய்த்த பேரொளி
முகம்மது வருவது நோக்கிக்
காய்த்தி ரட்குலை
சாய்த்துநின் றிறைஞ்சின கதலி.
3
|