பக்கம் எண் :

சீறாப்புராணம்

337


முதற்பாகம்
 

பரவும்படி ஆடி நிற்பவைகள், நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைப் பார்த்து மனக்களிப்படைந்து திரண்டு விடுதலையுடைய மெல்லிய சிறகுகளிற் பொருந்திய விழிக ளெல்லாவற்றையுந் திறந்து பார்ப்பவைகளை நிகர்த்திருந்தன.

 

866. கோட்டு மென்மலர் வாசமுங் கொடிமலர் விரையுஞ்

    சூட்டு நீர்மலர் நிலமலர் வாசமுந் தூர்த்துப்

    பூட்டும் விற்கர முகம்மது மெய்யினிற் பொங்கிக்

    காட்டு மான்மதங் காவகங் காவதங் கமழும்.

10

     (இ-ள்) அன்றியும், பூட்டிய கோதண்டத்தைத் தாங்கிய கையினையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களது காத்திரத்தின்கண் பொலிந்து காட்டுகின்ற கஸ்தூரி வாசனையானது ஜனங்கள் தங்களது மேனியின்கண் சூட்டா நின்ற அந்தச் சோலையின்கண் தங்கிய மெல்லிய கோட்டுப்பூவின் வாசத்தையும் கொடிப்பூவின் வாசத்தையும் நீர்ப்புவின் வாசத்தையும் நிலப்பூவின் வாசத்தையும் தூரும்படி செய்து ஒவ்வொரு திக்கிலும் காதவழி தூரம் கமழா நிற்கும்.

 

867. ஒரும னைப்பிறந் தொருமனை யிடத்தினி லுறைந்து

    கருவ ரத்தரித் தீன்றுதன் கணவனை யிகழாப்

    பொருவ ரம்புறும் பெண்கொடி யெனத்தலை சாய்த்துத்

    திருவுஞ் செல்வமுந் திகழ்தரக் காண்பன செந்நெல்.

11

     (இ-ள்) அன்றியும், ஒரு வீட்டின்கண் அவதரித்து மற்றொரு வீட்டின்கண் வாசஞ் செய்து கருப்பமானது வரத்தாங்கிப் பெற்றுத் தனது நாயகனை யிகழாத பெரிய வரம்பினைப் பொருந்திய பெண் கொடியைப் போலப் பார்ப்பவர் கண்களுக்கு தங்களது சிரங்களைச் சரித்து அழகும் செல்வமும் பிரகாசிக்கும்படி தோற்றுவன அங்குற்ற சிவந்த நெற்பயிர்கள்.

 

868. துன்னு மெல்லிதழ் வனசமும் பானலுஞ் சுரும்புண்

    டின்னி சைப்பட வூட்டுதேங் குவளையு மிடையிற்

    செந்நெ ருப்பநா விரித்தசே தாம்பலுஞ் செறிந்து

    வன்ன மென்படம் போர்த்தபோன் றிருந்தன வாவி.

12

     (இ-ள்) அன்றியும், நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் வருகின்ற அப்பாதையின் கண்ணுள்ள தடாகமானது, வண்டுகள் மதுவையருந்தி இனிய கீதங்கள் பொருந்தும்படி யூட்டாநிற்கும் நெருக்கமுற்ற மெல்லிய இதழ்களையுடைய தாமரையையும் நீலோற்பலத்தையும் அரத்தோற்பலத்தையும் இவைகளி னிடையில் சிவந்த அக்கினியின் சுவாலையை விரிக்கப் பெற்ற செங்குமுகத்தையும் மிகுக்கப் பெற்று சித்திரிப்பையுடைய மென்மையவான போர்வை போர்த்ததை நிகர்த்திருந்தது.