பக்கம் எண் :

சீறாப்புராணம்

341


முதற்பாகம்
 

      (இ-ள்) அன்றியும், அம்மாடங்கள் எங்களது நபிறசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் இவ்விடத்திற்கு எதிர்த்து வந்தார்களென்று சொல்லி அவர்களின் நிறைந்த அழகைச் சந்திரனானது தவழா நின்று தங்களது சன்னல்களாகிய கட்கடைகளைத் திறந்து பார்ப்பவைகளைப் போல உயர்ந்த பசிய கிரணங்களைப் பரப்பி எவ்விடங்களிலும் பிரகாசத்தை விரிக்கா நிற்கும் இரத்தினவர்க்கங்க ளழுத்திய மாடங்கள்.

 

879. கந்தநறு வெண்சுதை கலந்தணி யிலங்கி

    வந்துநக ரந்தனை வளைந்தமதி ளாடை

    யிந்தநில மெங்குமெதி ரின்றென வியந்தே

    யந்தர மடங்கலு மளந்தது வளர்ந்தே.

23

     (இ-ள்) அன்றியும், வாசனை பொருந்திய நறிய வெண்ணிறத்தையுடைய சுண்ணச்சாந்து கலப்புற்று அழகானது பிரகாசிக்கப் பெற்று அந்த ஷாமென்னும் நகரத்தை வந்து சூழ்ந்த கோட்டை மதிளாகிய ஆடையானது, தனக்கு இப்பூலோகத்தின் கண்ணுள்ள எவ்விடமும் ஒப்பில்லையென்று சொல்லி வியப்புற்று ஓங்கி ஆகாய முழுவதையும் அளந்தது.

 

880. சீதவக ழாடையை யுடுத்தணி சிறந்து

    மோதியிட றுங்கரு முகிற்குழன் முடித்தே

    யாதிமணி வாயின்முக மாகவழி யாத

    மாதர்தமை யொத்தது வளைந்தமதி ளம்ம. 

24

     (இ-ள்) அன்றியும், அந்த ஷாம் தேசத்தைச் சூழ்ந்த அம்மதிலானது குளிர்ச்சி பொருந்திய அழகாகிய வஸ்திரத்தைத் தனது அரையின் கண் தரித்து அழகு சிறக்கப் பெற்று மோதி இடறாநிற்கும் கரிய நிறத்தையுடைய மேகமாகிய கூந்தலைச் சிரசின்கண் கொண்டையாக முடித்து முதன்மையான இரத்தினவர்க்கங்களையுடைய வாயிலானது முகமாகக் கற்பின் நிலைமைகெடாத பெண்களை நிகர்த்தது.

 

881. பந்திபெற நின்றபட லந்தனி யெழுந்தே

    யந்தர நடந்துதிர ளாரமணி வாரிச்

    சிந்துதிரை வாரியற வுண்டது திரண்டு

    வந்துநனி மஞ்சடை கிடக்குமதி ளன்றே.

25

     (இ-ள்) அன்றியும், அம்மதிலானது வரிசையுறும்படி நிற்கப் பெற்ற மிகுத்த மேகக் கூட்டங்கள் ஒப்பறவெழும்பி ஆகாயத்தின் கண் நடந்து சென்றுத் தொகுதியாகிய முத்துமணிகளை அள்ளிச் சொரியா நிற்கும் அலைகளையுடைய சமுத்திரத்தினது நீரை அதிகமாகக் குடித்துத் திரட்சியுற்று மீளவும் ஆகாயத்தினது வழியாக வந்து நீங்காது குடியாயிருக்கப் பெற்ற மதில்.