முதற்பாகம்
(இ-ள்) அப்போது
அறிஞர்களாகிய அனைவர்களும் அவரவர்களின் விடுதியின்கண் போய்ப் புகுந்தார்கள். அன்றியும்,
கருமையானது தவழாநின்ற மேகக்குடையையும் புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தினையுமுடைய குரிசிலாகிய
நமது நாயகம் முகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுடன் அவர்களிருக்கப்பட்ட அவ்விடத்திலேயே
அபூபக்கரவர்களும் பிரகாசிக்கும்படி இருந்தார்கள். மக்கமாநகரத்தின் கண்ணுள்ள மற்றும்
வியாபாரிகளும் மேலான குணத்துடன் தங்கள் தங்களிடத்தில் தங்கியிருந்தார்கள்.
889.
புவிவளர நன்கனி
பொழிந்ததரு வூடோர்
சுவையுமற நஞ்சுகள்
சொரிந்தசெடி யென்னப்
பவமிடறு வஞ்சனை
படுங்கொலை படைத்த
அபுசகுலெ னுங்கொடிய
பாவியு மடைந்தான்.
33
(இ-ள்)
அந்நேரத்தில் நல்ல கனிவர்க்கங்களைப் பூமியின்கண் ஓங்கும்படி பொழியா நிற்கும் மரக்கூட்டங்களினிடையில்
யாதொரு இனிமையுமற்ற விடங்களைப் பொழியா நின்ற ஒரு நஞ்சுச் செடியைப் போலப் பாவத்தையும்
ஆபத்தையும் மாயத்தையும் மிகுத்த கொலையையு முடையதாகிய அபூஜகிலென்று சொல்லும் கொடிய பாதகனும்
அவ்விடத்தி லடைந்திருந்தான்.
890.
எவ்வுழி யிருந்திவ
ணடைந்தவர்க ணீவிர்
செவ்விய திறற்குரிசி
லியார்தொழிலி யாதென்
றவ்வுலகி லந்நக
ரடைந்தவர்கள் வந்தே
யொவ்வொரு வரைத்தனி
யுசாவினர்க ளன்றே.
34
(இ-ள்)
அப்போது வியாபாரிகளாகிய அவர்கள் தங்கி இருந்த அவ்விடத்தின்கண் அந்த ஷாம் தேசத்தைப் பெற்றவர்கள்
வந்து நீங்கள் எவ்விடத்தின் கண்ணிருந்து இங்கு வந்து சேர்ந்தவர்கள்? அழகிய வலிமையுடைய
குரிசிலாகிய அவர் யார்? உங்களுடைய தொழில் யாது? என்று அவர்களி லொவ்வொருவரையும் தனித்தனியாக
உசாவிக் கேட்டார்கள்.
891.
மக்கநக ரத்தபுதுல்
முத்தலிபு மன்ன
ருக்குரிய பேரருயிர்
போன்முகம்ம தென்போர்
தக்கபுக ழுக்குமதி
மிக்கவர் சரக்கோ
டொக்கலொடு வந்தன
மெனத்தனி யுரைத்தார்.
35
(இ-ள்)
அவ்விதம் கேட்கவே, அவ்வியாபாரிகள் அவர்களை ஒப்பற நோக்கி அவர் மக்கமாநகரத்தை யுடைய
அப்துல் முத்தலிபாகிய மன்னவரினது சொந்தமானபேரர் அன்றியும்,
|