பக்கம் எண் :

சீறாப்புராணம்

352


முதற்பாகம்
 

அவற்றை எங்களுக்கு விலைக் கிரையத்திற்குத் தாருங்களென்று சொன்னார்கள்.

 

913. உறுதிகொள் சரக்குவிற் றொடுக்கி யிப்பதி

    மறுசரக் கெவையையும் வாங்கி னோமினிச்

    சிறிதுள சரக்கெனச் செப்பச் சாமிக

    ளறுதியின் விலைக்கெடுத் தருள்க வென்றனர்.

13

     (இ-ள்) அவ்விதம் அவர்கள் சொல்லவே அதைக் கேட்ட நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அவர்களைப் பார்த்து நாங்கள் வலிமையைக் கொண்ட சரக்குகளனைத்தும் விலைக்கிரயஞ் செய்து முடிவு செய்துவிட்டு இந்த ஷாம் தேசத்திலுள்ள மற்றச் சரக்குகளெல்லாவற்றையும் வாங்கினோம். ஆனால் இன்னம் கொஞ்சச் சரக்குகளுண்டென்று சொல்ல, அதை அந்த ஷாம் தேசத்தை யுடையவர்களான சூதர்கள் கேட்டு அவற்றை எங்களுக்கு முடிவான விலை கூறி எடுத்துத் தாருங்களென்று சொன்னார்கள்.

 

914. அனையவர் கூறக்கேட் டடுத்த மக்கிகண்

    மனையினிற் புகுந்தெடுத் தியாவும் வைத்தனர்

    வினையமற் றுறுவிலை விள்ளச் சம்மதித்

    தினையன சரக்கெலா மிசைந்து வாங்கினார்.

14

     (இ-ள்) அவ்விதமாக அந்தச் சூதர்கள் சொல்ல, பக்கத்தில் சமீபித்திருந்த மக்கமாநகரத்தை யுடையவர்களான அவ்வியாபாரிகள் தங்களது காதுகளினாற் கேள்வியுற்றுத் தங்களின் விடுதிகளில் போய் நுழைந்து விற்று மிஞ்சியிருந்த சரக்குகளெல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு வந்து வைத்து அவைகளுக்கு வஞ்சகமில்லாது பொருந்திய விலைகளைக் கூற, அவ்விலைக்கு அந்தச் சூதர்கள் மனச்சம்மதங் கொண்டு இசைந்து அந்தச் சரக்குக ளெல்லாவற்றையும் வாங்கினார்கள்.

 

915. சொல்லிய விலைப்பொருட் டொகையை நும்வயி

    னொல்லையி னுதவுதற் குறுதி யாகவே

    மல்லுடைப் புயத்திறன் முகம்ம தேயெம

    தில்லிடை வருகவென் றிசைத்திட் டாரரோ.

15

     (இ-ள்) அவ்வாறு வாங்கிய அந்தச் சூதர்கள் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைப் பார்த்து வலிமை கொண்ட புயசாமர்த்தியத்தையுடைய முகம்மதானவர்களே! தாங்கள் கூறிய விலையினது பொருள் தொகை வலிமையுடன் நாங்கள் தங்கள்பால் விரைவில் தருவதற்கு எங்கள் வீட்டின்கண் எழுந்தருளுங்களென்று சொன்னார்கள்.