பக்கம் எண் :

சீறாப்புராணம்

36


முதற்பாகம்
 

சேரப் பண்ணித் தங்களின் கூட்டத்தோடும் ஒன்றுகூடி விரிந்த சிவந்த தாமரை மலரை நிகர்த்த கைகளானவை வருத்த முறும்படி கட்டி இறுக்கிய பல சுமைகளைத் தாங்கிப் பொருந்திய வரம்பினது பாதையின் கண்ணுள்ள வாழை மரத்தினது புலியினடியை யொத்த குலையின் தலையைச் சாய்க்கச் செய்வார்கள்.

 

     59. அசைந்தசிற் றிடைமென் கொடிவருந் திடநீ

             ளணிவட மார்பிடை புரளப்

        பசுங்கிளிப் பரிவேள் படையெனத் திரண்ட

             கடைசியர் சுமையெலாம் பரப்பி

        யிசைந்திட நிறைத்துக் குவித்தநெற் போர்க

             ளெங்கணு மிலங்கிய தோற்றம்

        விசும்பினைத் தடவ வரைசத கோடி

             வீற்றிருந் தனவெனச் சிறக்கும்.

39

      (இ-ள்) பசிய தத்தை வாகனத்தையுடைய மன்மதனது சேனையைப் போலுங் கூடிய அவ்வுழத்தியர்கள் அசையுகின்ற சிறியமருங்குலாகிய மெல்லிய கொடியானது வருத்தமுறவும் நீண்ட அழகிய மணிவடங்கள் மார்பின்கண் புரளவும், அவ்வாறு சுமைகளெல்லா வற்றையும் பரவச் செய்து பொருந்தும்படி நிறைத்துக் குவியல்படுத்திய நெற் போர்கள் எவ்விடத்தும் பிரகாசித்த தோற்றமானது, ஆகாயத்தைத் தடவும் வண்ணம் நூறு கோடி மலைகள் வீறுடன் இருந்தன வென்று சொல்லும் வண்ணம் சிறக்காநிற்கும்.

 

     60. கார்த்தடக் களிற்றின் வனப்பினை யழித்த

             கருங்கடா வினம்பல விணைத்துப்

        போர்த்தலை திறந்து திரித்துவை நீத்துப்

             பொன்னிறச் செந்நெலைக் குவித்துச்

        சேர்த்திடுஞ் சகடந் தொறுந்தொறு மியற்றித்

             திரண்மனை வயின்வயின் செறிப்பா

        ரார்த்தபே ரோதை யினமணி கொழிக்கு

             மறைதிரைக் கடலினைப் பொருவும்.

40

      (இ-ள்) கரு நிறத்தைக் கொண்ட பெரிய யானையினது அழகைக் கெடுத்த பல கரிய எருதுகளி னினத்தை ஒன்று சேர்த்துப் போர்களினிடத்தைத் திறந்து திரித்து வைக்கோலை நீக்கிப் பொன்னினது நிறத்தையுடைய சிவந்த நெல்லைக் குவித்துச் சேர்த்த வண்டிகள் எல்லாவற்றிலும் இயற்றிக் கூட்டமாகிய வீட்டுகளினிடத்திற் செறிக்கப்பட்டவர்கள் ஒலித்த பெரிய ஒலியானது கூட்டமாகிய இரத்தினங்களைக் கொழிக்கும் ஒலிக்கின்ற அலைகளையுடைய சமுத்திரத்தை நிகரா நிற்கும்.