முதற்பாகம்
1234.
அன்ன காலையிற்
செவ்விய நெறிபனி யாசீ
மென்னும் வங்கிடத்
தொருவரிப் பள்ளியி னிடத்து
முன்ன தாகவந்
தவர்நிறு வுவரென முதலோன்
பன்னு மாமறை தெளிந்தவர்
சிலர்பகர்ந் தனரே.
19
(இ-ள்) அந்தச்
சமயத்தில் யாவற்றிற்கு முதன்மையனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவானவன் சொல்லிய மகத்தான வேதங்களைக்
கற்றுத் தேர்ந்தவர்களாகிய சில பேர்கள் இந்த ஹஜறுல் அசுவதென்னும் கல்லை அழகிய சன்மார்க்கத்தையுடைய
பனீஹாஷிமென்று சொல்லும் குடும்பத்திலுள்ள ஒருவர் இந்தக் கஃபத்துல்லாவினிடத்தின் முன்னாக வந்து
அவரே நிறுத்துவாரென்று சொன்னார்கள்.
1235.
ஈது நன்றெனக் குறைசிக
ளனைவரு மிசைவுற்
றோதும் வேளையி
லகமலர்க் களிப்புட னுலவித்
தூத ராகிய முகம்மது
மவ்வுழித் தோன்ற
சீ்த வொண்கம
லானனங் குளிர்தரச் சிறந்தார்.
20
(இ-ள்) அவர்கள்
அவ்விதம் சொல்லவே அதைக் கேட்ட குறைஷிகளான யாவர்களும் இதுவே நல்ல சமாச்சாரமென்று மனம்
பொருந்திச் சொல்லுகின்ற தருணத்தில், ஹக்கு சுபுகானகுவத்த ஆலாவின் றசூலான நாயகம் நபிமுகம்மது
சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் இருதயத் தாமரையினது சந்தோஷத்தோடும் உலாவி அவ்விடத்தில்
வர, அதைக் கண்ட அக்குறைஷிகள் யாவர்களும் தங்களின் குளிர்ச்சி தங்கிய ஒள்ளிய முண்டகமலர்போலும்
முகங்கள் குளிரும் வண்ணம் சிறப்படைந்தார்கள்.
1236.
நீங்கி டாக்கனற்
சுரத்திடை நிறைபுன லளித்து
வேங்கை யோடுரை
பகர்ந்தசெங் கதிர்வடி வேலோய்
பாங்கி
னிற்கருங் குவட்டைமுன் பதித்திடுந் தலத்திற்
றாங்கி வைத்திடு
மென்றனர் நிலைபெறுந் தலத்தோர்.
21
(இ-ள்) அவ்வாறு
சிறப்படைந்த நிலைபெறா நிற்கும் அத்தானத்தையுடையவர்களான குறைஷிகள் நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு
அலைகிவசல்ல மவர்களைப் பார்த்து மாறாத அக்கினியையுடைய பாலை நிலத்தின்கண் நிறைந்த தண்ணீரை
யருளிப் புலியுடன் வார்த்தைகள் பேசிய செந்நிறமமைந்த பிரகாசமுற்ற கூர்மையான வேலாயுதத்தை யுடையவர்களே!
பக்கத்திலிருக்கும் கரிய கல்லை முன்னர் பதித்த இடத்தில் உங்கள் கைகளினால் தாங்கி வையுங்களென்று
சொன்னார்கள்.
|