முதற்பாகம்
1237.
உரைத்த தங்குல
மன்னவ ருளங்களிப் பேற
வரைத்த டம்புய
மேலுறு போர்வையை வாங்கி
விரித்து நன்குறு
துகிலிடை நாப்பணின் விளங்க
விருத்தி னார்செழுங்
கரத்தினிற் கருங்கலை யெடுத்தே.
22
(இ-ள்) அவ்வாறு
சொல்லிய தங்களின் குடும்பத்தினது அரசர்களான அந்தக் குறைஷிகளின் மனதில் சந்தோஷமானது அதிகரிக்கும்
வண்ணம் நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் மலைபோலும் விசாலமாகிய தங்களின்
தோள்களின் மேலே பொருந்தும் போர்வையை வாங்கிப் பூமியின் மீது விரித்து நன்மையதிகரித்த
அப்போர்வையினது மத்தியின்கண் பிரகாசிக்கும்படி செழிய கைகளினால் அந்த ஹஜறுல் அசுவதென்னுங்
கரிய கல்லைத் தூக்கி இருத்தினார்கள்.
1238.
வெற்றி மன்னவர்
றலைவரி னால்வரை விளித்துப்
பொற்ற டந்துகின்
முந்தியி னான்கினும் பொருந்த
விற்று றாவகை யெடுமென
விவரொடு மெடுப்பக்
குற்ற மின்றிமுற்
றலத்திடை யிருத்தினர் குறித்தே.
23
(இ-ள்) அவ்விதம்
இருத்தி விஜயத்தையுடைய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அங்கு நின்ற
தலைவர்களான குறைஷிகளில் நான்கு பேரைக் கூப்பிட்டுப் பொன்போலும் விசாலமாகிய அந்தப்
போர்வையினது நான்கு முன்றாளைகளிலும் பொருந்தும் வண்ணம் இற்றுப் போகாதவிதத்தில் தூக்குங்களென்று
சொல்ல, இவர்கள் தூக்க இவர்களோடும் குறிப்பாக யாதொரு குற்றமுமில்லாது முன்னிருந்த தலத்தின்கண்
இருக்கும்படி செய்தார்கள்.
1239.
வலிய வீரர்க
ளுரைத்திடும் படிமுகம் மதுவு
நலிவி லாதெடுத்
திருத்திய நறுங்கருங் குவட்டை
யொலிகொ ளும்படித்
தொட்டுற முத்தமிட் டுவந்து
நிலைத ரும்படி
சதுர்தர மதிணிறு வினரே.
24
(இ-ள்) வலிமையையுடைய
வீரர்களான அந்தக் குறைஷிகள் சொல்லிய வண்ணம் நாயகம் ஹபீபுறப்பில் ஆலமீன் முகம்மது முஸ்தபாறசூல்
சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும் யாதொரு வருத்தமுமில்லாது அவ்வாறு தூக்கி இருக்கச் செய்த நன்மையமைந்த
அந்தக் கரிய கல்லை ஓசைகொள்ள யாவர்களும் தங்கள் கைகளினால் தொட்டுப் பொருந்தும்படி முத்தமிட்டு
மகிழ்ச்சியாகி நிலைக்கும் விதமாய் நான்காக மதில்களை நிறுத்தினார்கள்.
|